ரஷ்யாவிடம் சிக்கி சாகக்கூடாது.. காலையே வெட்டி 8 மாதம் போராடி தப்பிய உக்ரைன் வீரர்.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்
கீவ்: வான் முழுக்க ரஷ்யாவின் ட்ரோன்.. சுற்றிலும் தொடரும் குண்டுமழை.. எப்போது வேண்டுமானாலும் தலையில் குண்டு விழுந்து உயிர் போகலாம்.. 8 மாதமாக பதுங்கிய பள்ளத்தில் இருந்து வெளியே வந்தால் மரணம் நிச்சயம் என்ற பீதியில்.. தனக்கு துணையாக தன்னுடன் சேர்ந்து போரிட்ட தோழன் கண்முன்னே எதிரியின் குண்டுக்கு பலியானாலும் மனம் தளராத அந்த 49 வயது உக்ரைன் வீரர் எடுத்த முடிவு நெஞ்சைப் பிளப்பதாகும்.

ட்ரோன்களின் கழுகு பார்வையில் சிக்கியதால் வீசப்பட்ட குண்டில் இறந்த நண்பன், படுகாயமடைந்த பிறகு மயக்க மருந்தோ மருத்துவ உதவியோ இன்றி கத்தியை கொண்டு தன் காலை துண்டித்தது எல்லாம் போர்க்களத்தின் உச்சக்கட்ட கொடுமையையும், உயிர் பிழைப்பதற்கான மனிதனின் விவரிக்க முடியாத போராட்டத்தையும் காட்டுகிறது.
அந்த ராணுவ வீரர் யார்? உயிர் பிழைப்பதற்காக தனது காலை வெட்டி எப்படி ரஷ்யா தாக்குதலில் இருந்து தப்பினார்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
போர்.. இன்று ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரில் முடிவின்றி குண்டு மழை பொழியப்பட்டு வருகிறது. போர் என்பது அப்பாவிகளை கொல்வதோடு மட்டுமின்றி ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிடும்.
குறிப்பாக போரில் ராணுவ வீரர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவர்கள். தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள ரஷ்யா - உக்ரைன் போரில் ராணுவ வீரர் ஒருவர் சொந்த நாட்டை காக்கவும், தனது உயிரை காப்பாற்றி கொள்ளவும் 8 மாதங்களாக எடுத்த ரிஸ்க் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனின் கிர்வி ரி பகுதியை சேர்ந்தவர் கோஸ்டியான்டின் விளாசென்கோ. இவருக்கு வயது 49.
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் செயல்படும் 30-வது மெக்கானைஸ்டு பிரிகேடை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு மே மாதம் உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் 'வெர்டூன்' என்ற இடத்துக்கு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த பகுதி மிகவும் ஆபத்தான இடமாகும். ரஷ்யா தனது நவீன ட்ரோன்கள் மூலம் அதிகமாக இங்கு தான் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இந்த இடம் ரஷ்யா - உக்ரைன் போரில் 'kill Zone' என அழைக்கப்பட்டது. இந்த ஆபத்து நிறைந்த இடத்தில் தான் கோஸ்டியான்டின் பணியில் இருந்தார்.
அவருடன் பாஸ்கி என்ற வீரரும் இருந்தார். இவர்கள் 2 பேரும் பூமிக்கடியில் ரகசியமாக அமைக்கப்பட்ட அறையில் தங்கி ரஷ்யாவின் ட்ரோன்களை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உக்ரைன் ராணுவம் சார்பில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலகங்கள் வீசப்படும். அதனை சாப்பிட்டு தான் இருவரும் ரஷ்யா ட்ரோன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர்.
சில மாதங்களுக்கு பிறகு கோஸ்டியான்டின் விளாசென்கோ மற்றும் பாஸ்கி ஆகியோருக்கு பதில் மாற்றாக 2 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்த 2 வீரர்களை ரஷ்ய ட்ரோன்கள் வரும் வழியிலேயே தாக்குதல் நடத்தி கொன்றன. அவர்களின் உடல்களை மீட்க போன 2 உக்ரைன் வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் உக்ரைன் அடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே பணியில் இருக்கும் கோஸ்டியான்டின் விளாசென்கோ மற்றும் பாஸ்கி ஆகியோரை விடுவிக்காமல் மீண்டும் பணியை தொடர வைத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கோஸ்டியான்டின், பாஸ்கி பதுங்கி இருந்த பதுங்கு குழிக்குள் தண்ணீர் நுழைந்தது. இதனால் இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி பள்ளி கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். அப்போது ராணுவ உடை, உணவுகளை உக்ரைன் ட்ரோன் வீசியது. அதனை எடுக்க வந்தபோது இருவரும் ரஷ்யாவின் கண்காணிப்பு ட்ரோனில் சிக்கினர். ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் பாஸ்கி என்ற வீரர் இறந்தார். கோஸ்டியான்டின் விளாசென்கோ காலில் படுகாயமடைந்தார்.
சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால் கோஸ்டியான்டின் இடதுகால் அழுக தொடங்கியது. வலதுகாலில் ஏற்பட்ட காயத்தால் லேசாக வளைந்து போனது. இதனால் அவரால் தவழ்ந்து கூட போக முடியாத நிலை வந்தது. இருப்பினும் தரையில் படுத்து மெல்ல மெல்ல நகர்ந்து பாய்லருக்கு அடியில் இருந்த குறுகிய பள்ளத்தில் தஞ்சமடைந்தார். இந்த துயரத்திலும் அவர் மனம் தளரவில்லை. எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும். உக்ரைனை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அவர் சிக்கிய இடத்தின் மேல்புறம் ஏராளமான ரஷ்ய ட்ரோன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. வெளியே வந்தால் மரணம் நிச்சயம். இதனால் கோஸ்டியான்டின் பள்ளத்துக்குள்ளேயே பதுங்கினார். இப்படியாக 3 மாதங்கள் கடந்தன. ட்ரோன் தாக்குதலில் காயம்பட்ட அவரது இடதுகால் அழுக தொடங்கியது. இது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதனால் அவர் கத்தியை பயன்படுத்தி தனது இடது காலை வெட்டி கட்டுப்போட்டு கொண்டார்.
இறுதியாக கோஸ்டியான்டின் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் காலை இழந்து உயிருக்கு போராடும் செய்தி உக்ரைன் ராணுவத்துக்கு சென்றது. இதையடுத்து ராட்சத ட்ரோனை அனுப்பி அவரை உக்ரைன் மீட்டது. இந்த சம்பவம் அக்டோபர் 4ம் தேதி நடந்தது. ராட்சத ட்ரோனில் 'ரோப்' கட்டி கோஸ்டியான்டின் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 'ரோப்பை' உதவியுடன் கோஸ்டியான் ட்ரோனில் ஏறினார். அந்த ட்ரோன் 15 கிலோமீட்டர் தொலைவு கடந்து பாதுகாப்பான இடத்துக்கு வந்தது.
அங்கு தயாராக இருந்த உக்ரைன் மருத்துவ குழுவினர் கோஸ்டியான்டினுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ட்ரோன் மூலம் ஒரு ராணுவ வீரர் மீட்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications
