சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் நான்சி பெலோசி- போர் பதற்றம் அதிகரிப்பு
தைபே: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி உரையாற்றினார். தைவானுக்கான நான்சி பெலோசியின் வருகையை சீனா எதிர்ப்பதால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Recommended Video
தைவான் தனிநாடாக இருந்த போதும் சீனா தன்னுடைய ஒரு மாகாணம் என கூறி வருகிறது. தைவானை எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் இணைப்போம் என்கிறது. தைவானை அச்சுறுத்தும் வகையில் அப்பகுதியில் போர் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் இந்த முயற்சிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்குப் பின்னர் தைவான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கு அதிகரித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் சபாநாயகரும் ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதியுமான நான்சி பெலோசி தமது தைவான் பயணத்தை அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் தைவான் வான்பரப்புக்குள் போர் விமானங்களை இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தது சீனா.
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நான்சி பெலோசி, தைவான் சென்றார். நான்சி பெலோசி தைவானில் வந்திறங்கிய போது, தைவான் ஜலசந்தியில் 20க்கும் மேற்பட்ட சீனாவின் போர் விமானங்கள் ஊடுருவி சென்றன. முதலில் இதனை மறுத்த சீனா, பின்னர் ஊடுருவலை ஒப்புக் கொண்டது.
தமது தைவான் பயணம் குறித்து கருத்து தெரிவித்த நான்சி பெலோசி, தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. தைவானுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் எமது பயணம் அமைந்துள்ளது என்றார். உலகின் சுதந்திரமான சமூகங்களில் தைவானும் ஒன்று எனவும் நான்சி குறிப்பிட்டார். பின்னர் தைவான் அதிபர் சாய் இங்-வென்னை, நான்சி பெலோசி சந்தித்துப் பேசினார். மேலும் தைவான் நாடாளுமன்றத்திலும் நான்சி பெலோசி உரையாற்றினார். இந்த உரையின் போது, தைவானுக்கான அமெரிக்காவின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே நான்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது. தைவானை முன்வைத்து அமெரிக்கா, சீனா நாடுகள் மோதி வருவதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.











Click it and Unblock the Notifications