பொதுத் தேர்தலை நோக்கி ஹிலரி க்ளிண்டன்: உட்கட்சி குழப்பத்தில் டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த வாரம் நடந்த ஐந்து மாநில உட்கட்சி தேர்தலில், அனைத்திலும் வெற்றி பெற்ற ஹிலரி க்ளிண்டன், ஜன நாயகக் கட்சி வேட்பாளராவது உறுதியாகியுள்ளது.
எதிரணியில், குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக வெற்றி பெற்று வரும் டொனால்ட் ட்ரம்ப் ஐ, அதிபர் வேட்பாளாராகாமல் தடுப்பதற்கு அந்த கட்சி மேலிடத் தலைவர்கள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஹிலரியின் தூக்கத்தை கலைத்த சான்டர்ஸ்
உட்கட்சி தேர்தல் பணிகள் ஆரம்பித்த நிலையில், ஹிலரியை எதிர்த்து யாரும் போட்டியிடப்போவதில்லை. பெயருக்கு ஓரிருவர் போட்டியிடுவர், இரண்டு அல்லது மூன்று மாநிலத் தேர்தலுடன், அனைவரும் விலகிவிடுவார்கள் என்ற எண்ணமே இருந்த்து.
யாரும் எதிர்பாராவிதமாக வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சான்டர்ஸ், தீவிரமாக களத்தில் இறங்கினார். தீவிர இட்து சாரி சிந்தனையாளரான சான்டர்ஸ்க்கு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது. சபாஷ், ஹிலரிக்கு சரியான போட்டி என்ற நிலைக்கு உயர்ந்தார். மிஷிகன் மாநிலத்தில் சான்டர்ஸின் வெற்றி, ஹிலரியை தடுமாறச் செய்து விட்டது என்றால் மிகையல்ல.

தொடர்ந்து வந்த ஒஹாயோ, ஃப்ளோரிடா, வட கரோலைனா, மிசோரி, இலனாய் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஹிலரி வெற்றி பெற்று தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இத்துடன் சான்டர்ஸ், போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
போட்டியிலிருந்து விலகிக்கொண்டால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. தொடந்து போட்டியில் இருக்கப்போவதாக சான்டர்ஸ் கூறியுள்ளார். இருப்பினும், தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற்று ஹிலரி வேட்பாளாராவது நிச்சயம் என்றே கூற முடியும்.
ட்ரம்ப் க்கு குடைச்சல் தரும் குடியரசுக் கட்சியினர்
குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஒஹாயோ வை ஜான் கேசிக்கிடம் தவற விட்ட நிலையில் தேவையான உறுப்பினர் வாக்குகளை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் நடைபெற உள்ள மாநிலங்களிலிருந்து 60 சதவீத உறுப்பினர்கள் ட்ரம்ப் க்கு தேவை. தனி மெஜாரிட்டி பெறவில்லை என்றால் கட்சி மாநாட்டில் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்தல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். போட்டியில் பங்கேற்காத ஒருவரைக் கூட வேட்பாளராக நியமனம் செய்ய முடியும்.

எப்படியாவது டொனால்ட் ட்ரம்ப் ஐ தடுத்து விட வேண்டும் என்று சீனியர் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். ட்ரம்ப் க்கு அடுத்த நிலையில் உள்ள டெட் க்ரூஸ் ம் சக சென்ட்டர்கள் மற்றும் சீனியர் தலைவர்களிடம் அன்னியப்பட்டு இருக்கிறார். செனட் தலைவர் மிச் மெக்கானலை 'பொய்யர்' என்று அவையிலேயே ஆவேசமாக பேசியவர் டெட் க்ரூஸ்.
மார்கோ ரூபியோ வை கட்சியினர் பெரிதும் எதிர்ப்பார்த்து இருந்தனர். சொந்த மாநிலமான ஃப்ளோரிடாவில் தோல்வியுற்றதால், போட்டியிலிருந்து விலகி விட்டார். ஒஹாயோவில் வென்ற, அங்கே தற்போதய கவர்னராக உள்ள ஜான் கேசிக் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவராக தெரிகிறார். ஆனால் மீதமுள்ள மாநிலங்களில் அவருடைய வெற்றி கேள்விக்குறியாக இருக்கிறது.
கட்சி மாநாட்டில், தன்னை அதிபர் வேட்பாளராக அறிவிக்காமல், தேர்தல் நடத்தினால் கலவரம் வெடிக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஜூலை 18ல் க்ளீவ்லேண்டில் நடைபெறப்போகும் குடியரசுக் கட்சி மாநாட்டில் கலவரம் வெடிக்கிறதோ இல்லையோ, ஆனால் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
குடியரசுக் கட்சியினர் குழம்பிக் கிடக்கும் வேளையில், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஹிலரி கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
ஹிலரி - ட்ரம்ப் போட்டி என்றால், தீவிர குடியரசுக் கட்சியினர் கூட ட்ரம்ப் ஐ விட ஹிலரி பெட்டர் என்று அவருக்கு வாக்களிப்பார்கள் என்று பேச்சும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications