மனித உரிமை மீறல்கள்: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா முடிவு- ஆதரவு தேடும் இலங்கை
நியூயார்க்: ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால், இதனை முறியடிக்க, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்ட இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டு உச்சகட்டம் அடைந்தது. அப்போது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு போர்க்குற்றங்கள் அரங்கேறின. போர் இல்லாத பிரதேசங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அங்கு நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின் சேனல்-4 டெலிவிஷன் அம்பலப்படுத்தி, உலக நாடுகளை அதிர வைத்தது.
ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்கா மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் 2 முறை தீர்மானம் கொண்டு வந்தது. அதில்,இலங்கை அரசுக்கு தோல்வியே கிடைத்தது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற்றால், இலங்கை மீதான நிர்ப்பந்தம் அதிகரிக்கும். சர்வதேச விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்படக்கூடும்.
இதகிடையே, அமெரிக்கா சென்றுள்ள அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட, தனது பிரதிநிதிகளை வெவ்வேறு நாடுகளுக்கு இலங்கை அரசு அனுப்பி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றால், மோதலில் தொடர்புடைய விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப்படையினர், ராணுவத்தினர் என அனைவர்மீதும் விசாரணை நடத்த வேண்டும். அது மீண்டும் காயங்களைத்தான் கிளறும். அது நாட்டில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும். 1980-ம் ஆண்டிலிருந்து, இந்திய அமைதிப்படை இருந்த இரண்டு ஆண்டு காலம் உள்ளிட்ட மொத்த காலக்கட்டத்துக்கும் விசாரணை நடத்த வேண்டும். இது இந்தியாவுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவைப் பாதிக்கும்' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications