10 மடங்கு வலிமை, பல மடங்கு அறிவு.. "சூப்பர்" சோல்ஜரை உருவாக்கும் சீனா.. அமெரிக்காவுக்கு புதிய தலைவலி
பெய்ஜிங்: அமெரிக்காவில் தண்டிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானி, இன்று சீனாவின் அதிநவீன ஆய்வகத்தில் அமர்ந்து கொண்டு, மனித மூளையையும் எலக்ட்ரானிக் கருவிகளையும் இணைக்கும் அபாயகரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இது வெறும் மருத்துவ ஆய்வு மட்டுமல்ல, போர்க்களத்தில் அசாத்தியத் திறன் கொண்ட 'சூப்பர் வீரர்களை' உருவாக்குவதற்கான சீனாவின் வியூகம் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கருதுகிறது.
இப்போது தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் சீனாவும் தான் மாறி மாறி போட்டிப்போட்டு வருகிறது. இரு நாடுகளும் பல அதிநவீன தொழில்நுட்பங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும், அமெரிக்காவில் இருக்கும் பல தலைசிறந்த ஆய்வாளர்களையே சீனா தன்பக்கமும் இழுத்து வருகிறது. அப்படி அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற ஒருவர் தான் ஒரு பகீர் ஆய்வில் இறங்கியுள்ளார்.

சூப்பர் சோல்ஜர்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானியாகப் போற்றப்பட்ட சார்லஸ் லீபர், சீனாவிடம் ரகசியமாகப் பணம் பெற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர். ஆனால், இப்போது அவரே தான் சீனாவிற்குச் சென்று அந்நாட்டின் கனவுத் திட்டமான 'சூப்பர் சோல்ஜர்' (Super Soldier) திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கான மூளை-கணினி இன்டர்பேஸ்(Brain-Computer Interface) ஆராய்ச்சியை அவர் தொடங்கியுள்ளது உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
இந்த சார்லஸ் லீபர்?
67 வயதான சார்லஸ் லீபர், வேதியியல் மற்றும் நானோ தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவர். உலகெங்கும் உள்ள திறமையான ஆய்வாளர்களை ஈர்க்கும் 'தௌசண்ட் டேலண்ட்ஸ் புரோகிராம்' திட்டத்தின் கீழ் சீனா லீபருக்கு பணம் வழங்கியது. இதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பிடம் மறைத்ததற்காக 2021ல் அவர் தண்டிக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்து, வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அவர் சீனாவுக்குச் சென்றார். இன்று ஷென்சென் நகரில் உள்ள 'ஐ-பிரைன்' நிறுவனத்தின் நிறுவன இயக்குநராகப் பதவியேற்றுள்ளார். லீபர் 'பிரைன்-கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ்' என்ற தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இது மனித மூளைத் திசுக்களுக்குள் மிக மெல்லிய எலக்ட்ரானிக் இழைகளைத் தைக்கும் ஆய்வாகும்!. இது பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேசவும் நடக்கவும் உதவும் என்கிறார்கள்.
சீன ராணுவம்
இருப்பினும், இதன் பயன்பாடு அத்தோடு நின்று போகாது. சீனா ராணுவத்தின் விஞ்ஞானிகள் இதனைப் பயன்படுத்தி வீரர்களின் மன உறுதி, வேகம் மற்றும் போர்க்களச் சூழலை உணரும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த முயல்கிறார்கள். அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கேப்டன் அமெரிக்காவைப் போல சூப்பர் சோல்ஜர்களை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் விலங்கு நலச் சட்டங்களால் செய்ய முடியாத பல பரிசோதனைகளைச் செய்ய லீபருக்கு சீனாவில் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது லீபரின் ஆய்வகத்தில் 2,000 குரங்குகளைக் கூண்டுகளில் அடைத்து ஆராய்ச்சி செய்யும் வசதி உள்ளது. மனிதர்களிடம் சோதனை செய்யும் முன் குரங்குகளிடம் மூளை சிப்களைச் சோதிக்க இது மிக அவசியம். லீபர் இருக்கும் நிறுவனத்திற்கு 2026ம் ஆண்டு மட்டும் சுமார் 153 மில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.. இது தவிர, பில்லியன் டாலர் மதிப்பிலான குவாங்மிங் சயின்ஸ் சிட்டி வளாகத்தில் இந்த ஆய்வகம் இயங்குகிறது. இதில் பல அதிநவீன வசதிகளும் உள்ளன.
அலறும் அமெரிக்கா
"லீபர் போன்ற ஒரு விஞ்ஞானி அமெரிக்காவில் தண்டிக்கப்பட்ட பிறகும், அவரால் சீனாவிற்குச் சென்று இவ்வளவு பெரிய ஆய்வகத்தை உருவாக்க முடிகிறது என்பது அமெரிக்கப் பாதுகாப்பு விதிகளின் தோல்வியையே காட்டுகிறது" எனப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிவிலியன் ஆராய்ச்சிகளை ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளும் சீனாவின் ராணுவ-சிவிலியன் இணைப்பு வியூகம் அமெரிக்காவிற்கு கடும் கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.
நோபல் பரிசு பெற வேண்டும் என்ற கனவில் இருந்த லீபர், இன்று சீனாவின் தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். மூளையில் மின்னணு கருவிகளைப் புகுத்துவதன் மூலம் மனிதக் குலத்திற்கு நன்மை ஏற்படுமா அல்லது போர்க்களத்தில் உணர்ச்சியற்ற மனித இயந்திரங்கள் உருவாக்குமா என்பதுதான் இப்போது பலரது அச்சமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications