“இப்போதுதான் எங்களின் போர் தொடங்குகிறது!” ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவிப்பு
தெஹ்ரான்: இன்று அதிகாலை, முன்னறிவிப்பின்றி ஈரானின் அணு சக்தி மையங்களை அமெரிக்கா அதிரடியாக தாக்கியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போர் இப்போதான் தொடங்கிருக்கிறது" என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பால், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக்கடல் மற்றம், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

சரி யார் இந்த 'ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை'(IRGC)? இதன் அறிக்கை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது? என்பதை புரிந்துக்கொள்வோம். ஈரான் ராணுவம் (Artesh என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guard Corps - IRGC) ஆகிய இரண்டும் ஈரானின் ஆயுதப் படைகளின் பகுதிகள்தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு நோக்கங்களையும், அதிகார அமைப்புகளையும் கொண்டுள்ளன.
ராணுவத்தை பொறுத்தவரை அது, மற்ற நாடுகளின் ராணுவத்தை போலவே வழக்கமாக ஈரானிலும் செயல்படுகிறது. ஈரானின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, எல்லைகளைக் காப்பது, மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவது இதன் முதன்மைப் பணியாகும். தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்புப் படை ஆகிய பாரம்பரிய இராணுவப் பிரிவுகளை இது கொண்டுள்ளது. ஈரானியப் புரட்சிக்கு முந்தைய 'ஷா' மன்னரின் பாரம்பரிய இராணுவத்தின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது. இது ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வழக்கமான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
மறுபுறம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை எடுத்துக்கொண்டால், ஈரானியப் புரட்சியின் கொள்கைகளையும், இஸ்லாமிய குடியரசையும் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த படையில் இருப்பவர்கள் 'புரட்சியின் காவலர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, ஆயத்துல்லா கொமேனியால் புரட்சிகர சக்திகளை ஒருங்கிணைத்து, பாரம்பரிய இராணுவத்திற்கு ஒரு பதிலாக உருவாக்கப்பட்டது இந்த IRGC. பாரம்பரிய இராணுவம் ஷா மன்னருக்கு விசுவாசமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் இது உருவாக்கப்பட்டது.
IRGC-க்கும் அதன் சொந்தமாக தரைப்படை, கடற்படை, விமானப்படை, விண்வெளிப் படை மற்றும் குட்ஸ் படை போன்ற சிறப்புப் படைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் வழக்கமான இராணுவத்தை விட நவீன மற்றும் மேம்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் குட்ஸ் படை என்பது, IRGC-யின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவு. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களான ஹிஸ்புல்லா, ஹவுதிகள் போன்ற அமைப்பினருக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதியுதவி அளிப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது.
குட்ஸ் தவிர, பசீஜ் என்ற ஒரு துணை ராணுவ தன்னார்வப் படையையும் IRGC கொண்டிருக்கிறது. இது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், அரசாங்க எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும், சமூகக் கட்டுப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
IRGC, ராணுவத்தை போல அந்நாட்டின் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டிருக்காது. மாறாக, அந்நாட்டின் பெரும் தலைவராக கருதப்படும் காமெனிக்கு மட்டுமே கட்டுப்பட்டிருக்கும். அவருக்கு மட்டும்தான் நேரடியாக ரிப்போர்ட் செய்யும். இந்த அமைப்பிடம் அதி நவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் இருப்பதால், ஈரான் ராணுவத்தை விட, இதுவே சக்தி வாய்ந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கையில்தான் இந்த அமைப்பு போர் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறது. "ஃபோர்டோ அணுசக்தி மையம் மீது தாக்குதல் நடக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அந்த வகையில் இன்று நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரிய அளவக்கான, திரும்பி வரமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை்" என்று கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications