புஷ் செய்த அதே தவறை.. ஈரானில் டிரம்ப்பும்.. போச்சு.. தவறான இடத்தில் கை வைத்த அமெரிக்கா!
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி அங்கே அமெரிக்கா போர் தொடுத்ததை நாம் மறக்க முடியாது. அங்கே உள்ள எண்ணெய் வளங்களை சூறையாட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பொய்யாக நடத்திய போரை மறக்கவே முடியாது.
அப்போது புஷ் செய்த தவறை.. இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்துள்ளார். ஈரானில் அணு ஆயுதம் இல்லை என்ற தகவல்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட பின்பும் போர் தொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் டிரம்ப்... இந்த முறை எண்ணெய் வளத்திற்காக இல்லாமல்.. இஸ்ரேல் நாட்டிற்காக!

இரண்டு நாட்டு மோதல்
இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் துளசி கப்பார்ட், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்று காங்கிரஸ் சபையில் சாட்சியம் அளித்த கருத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு "மிக அருகில்" இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் கூறினார். முன்னதாக மார்ச் மாதம் துளசி கப்பார்ட் காங்கிரஸ் சபையில் ஈரான் ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை என்றும், அதன் யுரேனியம் கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.. ஆனாலும் அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்க பல வருடங்கள் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.
துளசி கப்பார்ட்டின் சாட்சியம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து துளசி கப்பார்ட் காங்கிரஸ் சபையில் சாட்சியம் அளித்தபோது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கருத்து தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், ஈரான் யுரேனியத்தை அதிக அளவில் செறிவூட்டியிருந்தாலும் இப்போதைக்கு அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது, என்று கூறி உள்ளார்.
எதிர்த்த துளசி
டிரம்ப்பிற்கு நெருக்கமாக அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் ஈரான் மீது போர் தொடுக்கும் முடிவை எதிர்த்து உள்ளார். ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத்தை உருவாக்குவதில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் சில வாரங்களில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும், இதனால் அவர்களை தாக்க போகிறோம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்.. ஈரான் அணு ஆராய்ச்சி செய்வது சரிதான். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அந்த நாடு இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் இல்லை. இன்னும் பல வருடங்கள் ஆகலாம் அதற்கு . இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் அங்கே நிலவவில்லை என்று துளசி கப்பார்ட் எதிர்த்து உள்ளார். அதாவது டிரம்ப் போடும் திட்டம் தவறு.. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இல்லை என்பதை துளசி கப்பார்ட் அடித்து சொல்லி இருக்கிறார்.
ஈராக் தாக்குதல் மறக்க முடியுமா?
அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தலைமையிலான அமெரிக்கா 2003-ல் சதாம் உசைன் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்தது. அந்த கருத்து பின்னர் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. அங்கே எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த போர் தொடுக்கப்பட்டதாக பின்னர் நிரூபணம் ஆனது.
அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் துளசி கப்பார்ட் அளித்த சாட்சியத்தை டிரம்ப் நிராகரித்ததோடு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு அருகில் இருப்பதாக இப்போது டிரம்ப் கூறியுள்ளதால்.. புஷ் செய்த அதே தவறை டிரம்ப் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications