இந்தியாவுக்கு வார்னிங்? பாகிஸ்தானுக்கு உதவும் புதின்.. கராச்சியில் களமிறங்கிய ரஷ்ய குழு.. பின்னணி
இஸ்லாமாபாத்: நம்முடன் மோதி வரும் பாகிஸ்தானுக்கு ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது. அதோடு நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார். ரஷ்யா - பாகிஸ்தானின் இந்த உறவுக்கு என்ன காரணம்? திடீரென பாகிஸ்தானுக்கு, ரஷ்யா உதவ முன்வந்தது ஏன்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பாகிஸ்தான்.. நம் அண்டை நாடாக உள்ளது. நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான், இப்போது நம் நாட்டை எதிரியாக பார்த்து வருகிறது. அதோடு நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதிகளை வைத்து அவ்வப்போது தாக்குதலையும் நடத்தி வருகிறது.

ஒரு காலத்தில் அடிக்கடி காஷ்மீரில் நம் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் சண்டை நடக்கும். தற்போது ஓரளவு இந்த சண்டை என்பது குறைந்துள்ளது. ஆனால் முற்றிலுமாக இன்னும் முடிவுக்கு வரவில்லை. காஷ்மீர் விவகாரத்தை எடுத்து கொண்டால் உலக நாடுகளில் ஒருதரப்பினர் நம் பக்கமும், இன்னொரு தரப்பினர் பாகிஸ்தான் பக்கமும் நின்று ஆதரவு அளிப்பார்கள்.
அந்த வகையில் நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா, எப்போதும் நம் நாட்டின் பக்கம் தான் இருந்தது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் 1971ல் பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வங்கதேசத்தை தனிநாடு கோரிக்கையை வைத்தனர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மோதினர். இதற்கு இந்தியா உதவியது. இந்திய படை வீரர்கள், பாகிஸ்தான் படை வீரர்களை விரட்டி வங்கதேசம் எனும் நாட்டை உருவாக்கி கொடுத்தனர்.
இந்த போரின் போது இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தது. பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் மீறி தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வங்கதேசம் உருவாக வழிவகுத்து கொடுத்தார். இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை நோக்கி அமெரிக்கா, பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்பியபோது இந்தியாவுக்கு உதவியாக ரஷ்யா (அப்போது சோவியத் யூனியன்) போர்க்கப்பலை அனுப்பியது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் பின்வாங்கியது. இப்படியாக நம் நாட்டுடன் காலம் காலமாக நட்பில் உள்ள ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்ய இறங்கி உள்ளது.

தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். அந்த நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளின் உதவியை கோரி வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில் தான் தற்போது நம் நாட்டின் நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. அதாவது பாகிஸ்தானின் கராச்சி நகரின் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் கார்ப்பரேஷன் என்ற இரும்பு அலை உள்ளது. இந்த ஆலையை பாகிஸ்தான் ஸ்டீல் என்று சுருக்கமாக கூறுவார்கள். இந்த ஆலையை அமைக்க பாகிஸ்தானுக்கு சோவியத் யூனியன் உதவி செய்தது.
இந்த ஆலையில் இருந்து 1.1-5 மில்லியன் டன் வரை எஃகு மற்றும் கனரக உலோகங்கள் தயாரிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான இந்த ஆலை முதலில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாளடைவில் ஆலை சரியாக நிர்வகிக்கப்படவில்லை. இதனால் தற்போது இந்த ஆலை என்பது மூடப்பட்டுள்ளது. அதோடு அந்த ஆலை மீது ரூ.345 மில்லியனுக்கு கடன் உள்ளது. இப்படியான சூழலில் தான் அந்த ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் தொழில்நுட்ப குழுவினர் பாகிஸ்தான் சென்று அந்த ஆலையை பார்வையிட்டுள்ளனர். இந்த ஆலையை மீண்டும் இயக்கி தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான இறுதி முடிவு வரும் ஜுலை மாதம் 30ம் தேதிக்குள் எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இது சக்சஸ் ஆகும் பட்சத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம் என்பது மெல்ல மெல்ல வலுப்பெற தொடங்கும்.
மேலும் பாகிஸ்தானுக்கு திடீரென்று ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பொதுவாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தான் நல்ல நட்பு என்பது இருக்கும். அதேபோல் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அது அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படும். ஆனால் சமீப காலமாக இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ரஷ்யா மட்டுமின்றி அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவு என்பது சிதைந்து விட்டது. அதேபோல் அமெரிக்கா - ரஷ்யா உறவிலும் விரிசல் உள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளை ரஷ்யா தொடர்ந்து அரவணைக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் சீனா - ரஷ்யா உறவு என்பது சமீப காலமாக உச்சத்துக்கு சென்றுள்ளது. அந்த வரிசையில் தான் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாகிஸ்தான் - ரஷ்யா இடையேயான இந்த விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications