வங்கதேசத்தை சூழ்ந்த போர் மேகம்.. முகமது யூனுஸ் போட்ட குண்டு.. அரசியல்வாதிகளுடன் திடீர் மீட்டிங்
டாக்கா: ‛‛நாம் போர் சூழலில் இருக்கிறோம். உள்நாடு மற்றும் நாட்டுக்கு வெளியே நடக்கும் செயல்களால் போர் சூழல் உருவாகி உள்ளது'' என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ்க்கு எதிராக ராணுவ தளபதி உள்பட இன்னும் சிலர் திரும்பி உள்ள நிலையில் அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது தொடர்பாக ராணுவ தளபதி வாக்கர் உஸ்ஜமான் மற்றும் முகமது யூனுஸ் இடையே பிரச்சனை உள்ளது.

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க ராணுவ தளபதி விரும்புகிறார். அதன்மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை மீண்டும் வங்கதேசத்தில் அமைக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
ஆனால் முகமது யூனுஸ் அதனை விரும்பவில்லை. தேர்தலை தள்ளிவைத்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நீடிக்க விரும்புகிறார். இதனால் தேர்தலில் சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டு்ம். இதனை முடித்து அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தலை நடத்தலாம் என்று அவர் நினைக்கிறார். தேர்தல் விவகாரத்தில் முகமது யூனுஸ்க்கு எதிராக ஒரு தரப்பு அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் தலைவர்கள் முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் முகமது யூனுஸ்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தலைமை ஆலோசகர் பதவியே வேண்டாம் என்று அதனை ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் டாக்காவில் உள்ள ஜமுனா விருந்தினர் மாளிகையில் 20 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நாட்டுக்கு உள்ளே நடக்கும் செயல் மற்றும் நாட்டுக்கு வெளியே நடக்கும் செயல் உள்ளிட்டவற்றால் போர் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது நம்மை முன்னோக்கி நகர்வதை தடுக்கிறது. நமது நாட்டுக்கான திட்டங்களை சிதைக்கிறது. மீண்டும் பழைய பாதைக்கு நம்மை இழுத்து செல்கிறது. நாட்டில் அவாமி லீக்(முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சி) கட்சி கடந்த 12ம் தேதி தடை செய்ப்பட்டது. இதையடுத்து நாட்டின் நிலைமையை மோசமாக்க நினைக்கின்றனர்.
இதில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த பிரச்சனையை முடிக்க முடியும் என்று நம்புகிறேன். சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நான் நடத்துவேன். ஒருவேளை அதனை செய்ய முடியாவிட்டால் குற்றம் புரிந்ததாக நினைப்பேன். 2026 ஜூன் 30ம் தேதிக்கு தேர்தலை நடத்திகாட்டுவேன்'' என்று கூறியுள்ளார். அதனை மீட்டிங்கில் பங்கேற்றவர்கள் ஏற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications