ஒலி மாதிரி பிரதமர் வேண்டாம்.. மோடி மாதிரி வேண்டும்.. நேபாள இளைஞர்கள் பேசுவதாக வீடியோ
காத்மாண்டு: நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் கேபி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் தான் "எங்களுக்கு கேபி சர்மா ஒலி போன்ற பிரதமர் வேண்டாம். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒருவர் தான் வேண்டும்'' என்று போராட்டத்துக்கு நடுவே இளைஞர் ஒருவர் கூறும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அதனை பாஜகவினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
இருப்பினும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கேபி சர்மா ஒலியின் ஆட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்து வந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராடினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வன்முறையானது.
இதையடுத்து நேற்று முன்தினம் கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நேபாளம் அந்த நாட்டின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. படிப்படியாக அங்கு அமைதி திரும்பி வருகிறது. அதேபோல் கேபி சர்மா ஒலியை பதவியில் இருந்து நீக்கியதை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி புதிய பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் போராட்டத்துக்கு நடுவே என்டிவிக்கு இளைஞர்கள் பேட்டியளித்தனர். அப்போது ஒரு இளைஞர், ‛‛எங்களுக்கு கேபி சர்மா ஒலி பிரதமராக வேண்டாம். எங்களுக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். இந்தியாவில் மோடி போன்ற ஒரு அரசு இருப்பதால் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது. அவரை போல் ஒருவர் எங்களுக்கும் இருந்தால் நேபாளமும் முன்னேறும்'' என்று கூறியுள்ளார்.
இதை கேட்டவுடன் அவரை சுற்றியிருந்த பிற இளைஞர்கள் உற்சாகமாக கத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பாஜகவினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications