இந்தியா-கனடா உறவில் திடீர் சிக்கல்.. முக்கிய பேச்சுவார்த்தை நிறுத்தம்! ட்ரூடோ அரசு இப்படி செய்யலாமா
ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நடந்து வந்த வர்த்தக பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லவொரு உறவு இருந்த வந்த நிலையில், திடீரென இந்த சிக்கல் வந்தது ஏன் என்று பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நல்ல உறவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூட தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்திருந்தார்.

மேலும், இந்தியாவில் இருந்து கனடா சென்று செட்டிலானவர்களும் அங்கே கணிசமாக இருக்கிறார்கள். இதனால் இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே வலுவான ஒரு உறவே இருந்து வந்தது. இதற்கிடையே இதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு: இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையும் இப்போது தடைப்பட்டுள்ளது. கனடா நாட்டில் இந்தியா பிரிவினைவாத நடவடிக்கைகள் அதிகரிப்பது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஆலோசனையை அக். மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாகக் கனடா அறிவித்துள்ளது. மேலும், அநாட்டின் வர்த்தக அமைச்சரின் இந்திய பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகக் கனடா தெரிவித்திருந்தது. இருப்பினும், இப்போது பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், இந்தாண்டிற்குள் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் பின்னடைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்ன பிரச்சினை: இந்தியாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக சீக்கிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாகக் கனடா இருக்கிறது. அங்கே கடந்த சில காலமாகவே காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கனடாவில் அதுபோல எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
குறிப்பாகக் கனடா நாட்டில் இருக்கும் இந்தியா தூதரகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. இவை எல்லாம் சேர்த்து இந்தியா கனடா உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி- ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கனடாவில் அதிகரிக்கும் இந்தியா விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில் இந்தியா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
காலிஸ்தான் விவகாரம்: இது ஒரு பக்கம் இருக்கக் கனடாவில் அதிகரிக்கும் காலிஸ்தான் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, "கருத்துச் சுதந்திரம், போராட்டம் நடத்தும் உரிமை ஆகியவற்றை கனடா எப்போதும் பாதுகாக்கும். இது எங்களுக்கு எப்போதும் ரொம்ப முக்கியம்.. அதே நேரத்தில், வன்முறையைத் தடுக்கவும், வெறுப்பை பின்னுக்குத் தள்ளவும் எப்போதும் நடவடிக்கை எடுப்போம்.. இங்கே ஒரு சிலர் நடந்து கொள்வது ஒட்டுமொத்த கனடாவின் நிலைப்பாடு இல்லை" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே அதிருப்தி இருந்தே வருவதாகக் கூறப்படுகிறது. ஜி20 மாநாட்டிற்கு முன்னதாகவே வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக நிறுத்த ட்ரூடோ அரசு கோரிக்கை விடுத்தாக தகவல் வெளியானது. இருப்பினும், அதற்கான காரணம் எதையும் கனடா அரசு கூறவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தச் சூழலில் தான் கனடா இது குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications