"கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்." அப்டேட்தான் முக்கியம்.. லோகோவை மாற்றிய நோக்கியா!
நோக்கியா நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது.
பார்சிலோனா: நோக்கியா நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது. இது புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்று நோக்கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் வளரும் வயதில் நோக்கியா மொபைலை தான் பெரும்பாலும் பயன்படுத்தியிருப்போம். அதிலும் குறிப்பாக இந்த 90ஸ் கிட்கள் முதல்முறையாக பயன்படுத்திய மொபைல் நோக்கியாவாக தான் இருக்கும்.
1100 உள்ளிட்ட சில நோக்கியா மொபைல் மாடல்கள் தான் அப்போது அனைவரும் பயன்படுத்தி வந்தனர். 2000களில் வந்த நோக்கியா மொபைல் ஒரு முறை சார்ஜ் செய்தாலே பல நாட்கள் வரை தாங்கும்.

நோக்கியா
ஆனால், 2010க்கு பிறகு நோக்கியா மெல்லத் தனது இடத்தை இழந்தது. ஆப்பிள், சாம்சங், குறிப்பாகச் சீன நிறுவனங்களின் வருகையால் நோக்கியாவின் சாம்ராஜ்ஜியம் மெல்ல அழிந்துபோனது. அதன் பின்னர் கம்பேக் கொடுக்க நோக்கியா மீண்டும் பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், பாவம் எதுவுமே கை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் மிகவும் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்ட நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட வாங்கியது. ஆனால், அப்போதும் கூட நோக்கியா நிறுவனத்தால் கம்பேக் தரவில்லை. இது நோக்கியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

60 ஆண்டுகளில் முதல் முறை
இந்தச் சூழலில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக நோக்கியா நிறுவனம் இப்போது தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்த புதிய லோகோவை நோக்கியா நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இத்தனை ஆண்டுகளாக நோக்கியாவின் அடையாளமாக இருந்த அந்த நீல நிறம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஊதா மற்றும் நீல நிறத்தில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளனர். லோகோவை மாற்றுவது எல்லாம் இருக்கட்டும் ஆனால், எப்போது கம்பேக் கொடுப்பீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

லோகோ மாற்றம்
இந்த புதிய லோகோ அவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றியுள்ளதையே காட்டுகிறது. புதிய லோகோவில் நோக்கியா என்ற வார்த்தையில் இருக்கும் ஐந்து எழுத்துகளும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. அவர்களுக்கே உரித்தான நீல நிறம் இதில் இல்லை. இது தொடர்பாக நோக்கியா சிஇஓ பெக்கா லண்ட்மார்க் கூறுகையில், "அந்த பழைய நிறமும் லோகோவும் மொபைல்களுடன் தொடர்புப்படுத்தி இருந்தது. இப்போது எங்கள் பிஸ்னஸே மாறிவிட்டது. வரும் காலங்களில் வணிக தொழில்நுட்ப நிறுவனமாக பணியாற்றுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன காரணம்
நோக்கியா நிறுவனம் மொபைல் துறையில் இனி கம்பேக் கொடுப்பது கடினம். ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் இடத்தை வலிமையாகப் பிடித்துவிட்டன. சீன நிறுவனங்களும் கடும் போட்டி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக மொபைல் உற்பத்திக்குப் பதிலாக மற்ற துறைகளில் கவனம் செலுத்த நோக்கியா முடிவு செய்துள்ளது. மற்ற துறைகளில் நோக்கியா வளர்ந்தாலும், அதன் ரசிகர்கள் நோக்கியா மொபைலை மிஸ் செய்யவே செய்வார்கள்.

புதிய பாதை
இப்போது நோக்கியா சிஇஓவாக உள்ள பெக்கா லண்ட்மார்க் 2020இல் இந்த பின்லாந்து நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்தார். மூன்று கட்ட விரிவான திட்டத்தை வகுத்த அவர் நோக்கியா நிறுவனத்தை மீண்டும் பூஸ்ட் செய்ய நடவடிக்கைகளை எடுத்தார். மொபைலுக்கு பதிலாக டெலிகாம் நிறுவனங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்யும் தொழிலில் நோக்கியா ஈடுபட்டு வருகிறது. அந்த துறையிலேயே கவனம் செலுத்தி வளர நோக்கியோ நிறுவனம் என்று கூறப்பட்டுள்ளது.

நல்ல வளர்ச்சி
இது குறித்து பெக்கா லண்ட்மார்க் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு நாங்கள் 21% வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.. டெலிகாம் பிஸ்னஸ் துறையில் இருந்து எங்களுக்கு 8% வருவாய் கிடைக்கிறது. அதை இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கவே விரும்புகிறோம்" என்றார். முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் நோக்கியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி நெட்வோர்க்கிற்கு தேவையான சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற துறைகளிலேயே நோக்கியா இப்போது கவனம் செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications