"எல்லாம் தயார்!" ஆனா கடைசியில் சூழ்ந்த பிரச்னைகள்! காசா மீது இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பிக்கலையே! ஏன்
டெல் அவிவ்: காசா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்த போதிலும், இன்னும் தாக்குதலைத் தொடங்காமல் தயக்கம் காட்டுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கிடையே காசா மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் அறிவித்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும், காசா இன்னும் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை.
கருத்து வேறுபாடு: ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், இன்னும் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இத குறித்து சர்வதேச வல்லுநர்கள் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே சிறு சலசலப்புகள் இருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகளை எடுப்பதில் இஸ்ரேலுக்கு இப்போது சிரமம் இருக்கிறது" என்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுப்பு: இஸ்ரேல் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளில் இந்த தகவல்களை மறுத்தே வருகிறது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவப்படை ஜெனரல்களுக்கு இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், உண்மையில் நிலைமை வேறாக இருப்பதாகச் சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஆய்வுகளைச் செய்யும் ஐசிடி உளவுத்துறை வல்லுநரான பேட்ரிக் பெட்டேன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "காசா மீது முழு வீச்சிலான படையெடுப்பு என்பதில் டாப் தலைவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருக்கவே செய்கிறது. இத்துடன் காசா பகுதியில் இன்னும் பிணையக் கைதிகளும் இருக்கும் நிலையில், அது நிலைமையைச் சிக்கலானதாக மாற்றுகிறது. படையெடுப்பு ஆரம்பிக்கும் முன்பு அனைத்து பிணையக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
பிணையக் கைதிகள்: ஹமாஸ் படையிடம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் பிணையக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்து, அதில் பிணையக் கைதிகளுக்கு எதாவது ஆனால் அது சர்ச்சையாகவிடும். படையெடுப்பைத் தொடங்க இஸ்ரேல் தயக்கம் காட்ட இதுவும் ஒரு காரணமாகும்.
இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தரும் வகையில் பல உலக தலைவர்கள் இஸ்ரேலுக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரை பல சர்வதேச தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட காசா மீது முழு வீச்சில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றே சொல்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா காசா மீதான படையெடுப்பைத் தாமதப்படுத்தச் சொல்லி வலியுறுத்துகிறது.
சர்வதேச அழுத்தம்: காசா மீதான படையெடுப்பு நடந்தால் அது மிகப் பெரிய ஒரு சங்கிலி எதிர்வினையை உருவாக்கும். இதனால் சண்டை அந்த பிராந்தியம் முழுக்க பரவும் என்று சர்வதேச நாடுகள் நம்புகிறது. இதனால் இஸ்ரேலுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் காசா மீதான படையெடுப்பை நடத்தக் கூடாது என்று கடுமையாக அழுத்தம் தருகிறார்கள். இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
காசா மீது தாக்குதலை ஆரம்பித்தால் அங்கே இருக்கும் பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையை சமாளிக்க வேண்டியிருக்கும்.. இது பொதுவாகக் காசா மெட்ரோ என்று அழைக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க் 400 கிமீ நீளம் கொண்டது என்று ஹமாஸே உறுதி செய்துள்ளது. இதைச் சமாளிப்பதும் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். மேலும், ஹமாஸ் மட்டுமின்றி ஹிஸ்புல்லா மற்றும் வேறு சில அமைப்புகள் எனப் பல முனை தாக்குதல்களை இஸ்ரேல் எதிர்கொள்வதும் ஒரு சிக்கலாகும்.
இப்படி ஹமாஸ் வசம் இருக்கும் பிணையக் கைதிகள், இஸ்ரேல் டாப் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, உலக நாடுகளின் அழுத்தம், காசா சுரங்கம், பல முனை தாக்குதல்கள் ஆகியவை காரணமாகவே காசா மீது படையெடுப்பை இஸ்ரேல் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications