இந்திய அரிசி மீதும் விழுந்த டிரம்ப் பார்வை.. பாஸ்மதி செய்த பாவம் என்ன?
டொனால்ட் டிரம்ப் எப்போதுமே வினோதமான விஷயங்களைச் செய்பவர். அதன் அடுத்த கட்டம்தான் இந்திய அரிசி ஏற்றுமதி மீதான அவரது பார்வை.
உண்மையில், உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் இந்தியா. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 30% பங்களிப்புடன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது. ஆனால், டிரம்ப் ஏன் இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டும்? அவர் அமெரிக்க விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது, இந்தியா அமெரிக்காவில் அரிசியை "கொட்டுவதாக"க் (Dumping) கூறியுள்ளார்.

அமெரிக்காவும் கணிசமான அரிசி உற்பத்தியாளர்தான். உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் இல்லையென்றாலும், சுமார் 7.5 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது அந்த நாடு. அதே நேரத்தில், 3 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்கிறது, ஆனால் 1.6 மில்லியன் டன் இறக்குமதியும் செய்கிறது.
அமெரிக்கா ஏன் இறக்குமதி செய்கிறது தெரியுமா.. பாஸ்மதி போன்ற சிறப்பு அரிசி வகைகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசியும், தாய்லாந்தில் இருந்து மணம் வீசும் மல்லிகை அரிசியும் (Jasmine Rice / Khao Hom Mali) இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் ஆசிய உணவுத் தொழில் காரணமாக இவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 66.65 லட்சம் டன்கள். இதில் அமெரிக்கா இறக்குமதி செய்வது 2.74 லட்சம் டன்கள் மட்டுமே, அதாவது நமது ஏற்றுமதியில் 4% மட்டுமே அமெரிக்கா செல்கிறது.
பாஸ்மதி அல்லாத அரிசியை 14 மில்லியன் டன்கள் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இதிலும் அமெரிக்காவின் பங்கு மிகக் குறைவு, வெறும் 61,342 டன்கள் மட்டுமே.
அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் அரிசியின் மதிப்பு சுமார் 337 மில்லியன் டாலர்கள். இது இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதியில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே. டிரம்ப் பேச்சு ஒருபுறம் இருக்க, இந்தியாவின் அரிசி உற்பத்தியும், கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.
இந்தியாவில் 2024-25ல் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக உற்பத்தியில் 28%. சீனாவில் 145.28 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலக உற்பத்தியில் 27%. இந்தியாவில் அரிசி உற்பத்தி அதிகரிப்பதற்கு அரசின் கொள்முதல் கொள்கையும் ஒரு காரணம்.
இந்தியாவின் அரிசியை வாங்குபவர்கள் யார்?
பாஸ்மதி அரிசியை அதிகம் வாங்குவது சவுதி அரேபியா. அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக வாங்குகிறது. ஈராக், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் அதிக அளவில் வாங்குகின்றன. பாஸ்மதி அல்லாத அரிசியை ஏழை நாடுகள் அதிகம் வாங்குகின்றன.
பெனின், கினியா, கோட் டி ஐவரி போன்ற நாடுகள் இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளர்கள். அமெரிக்காவின் இறக்குமதி லைபீரியா மற்றும் சியரா லியோன் போன்ற நாடுகளின் இறக்குமதிக்குச் சமமாக உள்ளது. இப்போது, இந்த கட்டுரையின் முதல் வரியை திரும்ப படித்துப் பாருங்கள்..












Click it and Unblock the Notifications