2016ன் தொடக்கத்திலேயே வாடிக்கையாளர்களைக் கடுப்பேற்றிய வாட்ஸ் அப்... "விஷ்" பண்ண திணறிய மக்கள்!
சிட்னி: புத்தாண்டும் அதுவுமாக பல இடங்களில் வாட்ஸ் அப் சேவை பல மணி நேரம் முடங்கியதால் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கையின் ஆறாவது விரலாய் செல்போன் திகழ்கிறதென்றால், அதில் நகமாய் காணப்படுகிறது வாட்ஸ் அப். ஒவ்வொரு தொலைபேசி சேவை நிறுவனமும் எஸ்.எம்.எஸ். எனும் குறுஞ்செய்திக்கு விதவிதமாய் கட்டணம் வசூலித்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் கட்டணம் கட்டுப்படியே ஆகாது. அந்தளவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
எனவே, வாடிக்கையாளர்களின் வரப்பிரசாதமாய் வாட்ஸ் அப் திகழ்கிறது. உடனடி மெசேஜிங் சேவையில் உலகளவில் வாட்ஸ் அப் முதலிடத்தில் உள்ளது.

அமோக ஆதரவு...
பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பும் வசதியும் இருப்பதால் மக்களிடையே இதற்கு அமோக ஆதரவு உள்ளது.

முடக்கம்
இந்நிலையில், நேற்றிரவு பலரும் தங்களது புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக பகிர திட்டமிட்டிருந்தனர். ஆனால், பல இடங்களில் இரவு 10 மணி முதலே வாட்ஸ் அப் சேவை முடங்கியது.

புகார்...
இந்த முடக்கமானது சில மணி நேரங்களுக்கு நீடித்ததாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொழில்நுட்ப செய்திகள் வெளியிடும் இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

டிவிட்டரில்...
புத்தாண்டின் தொடக்கமே வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் கடுப்பான வாடிக்கையாளர்கள் டிவிட்டருக்கு வந்து, இது தொடர்பாக குறை கூறினர்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்...
இந்த பிரச்சனை குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "குறிப்பிட்ட சிலருக்கு இன்று வாட்ஸ் அப் சேவை குறுகிய காலம் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். விரைவில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கும் சேவை கிடைக்கும். சேவை முடங்கியதால் ஏற்பட்ட தடங்கலுக்காக வருந்துகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
