ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்
தெஹ்ரான்: ஈரானின் சுப்ரீம் லீடராக மோஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டு சுமார் ஒரு மாதமாகிறது. இருப்பினும், இதுவரை அவர் பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் பரவிய சூழலில் இது தொடர்பாக ரஷ்யா தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு விளக்கம் வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இந்த போரில் முதல் நாளே அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராகக் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அலி கமேனி கொல்லப்பட்டார்.

மோஜ்தபா கமேனி
இதையடுத்து ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மோஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார். அவர் நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதமாகிறது. இருப்பினும், இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் தொடர்ச்சியாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது அறிக்கைகள் ஈரான் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இருப்பினும், அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலேயே இருக்கிறார்.
இதற்கு முன்பு சுப்ரீம் லீடராக இருந்த அலி கமேனி எவ்வளவு மிரட்டல்கள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். ஆனால் புதிய சுப்ரீம் லீடர் மோஜ்தபா கமேனி பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவரது உடல்நிலை தொடர்பாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
பரவிய தகவல்
அலி கமேனி பிப்ரவரி 28ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். அதில் அவரது பல்வேறு குடும்ப உறுப்பினர்களும் கூட படுகொலை செய்யப்பட்டனர். அதே இடத்தில் தான் மோஜ்தபா கமேனியும் இருந்த நிலையில், அவரும் உயிரிழந்ததாக சில ரிப்போர்ட்கள் முதலில் வெளியானது. இருப்பினும், இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தாலும் உயிருடனேயே இருப்பதாகப் பின்னர் தகவல் வெளியானது. நடுவே அவர் ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இப்படி பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இந்த யூயகங்களுக்கு எல்லாம் ஈரானுக்கான ரஷ்யத் தூதர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ரஷ்யா விளக்கம்
இது தொடர்பாக ரஷ்யத் தூதர் அலெக்சி டெடோவ் கூறுகையில், "மோஜ்தபா கமேனி ஈரானில் தான் இருக்கிறார், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய சில காரணங்களுக்காக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார்" என்று குறிப்பிட்டார். அதாவது மோஜ்தபா கமேனி ரஷ்யாவில் சிகிச்சை பெறுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.. ஈரானிலேயே அவர் இருக்கிறார் என்பதையே டெலோவ் சொல்கிறார். காயம் காரணமாகவே அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார்.
பிப்ரவரி 28ம் தேதி நடந்த தாக்குதலில் மோஜ்தபா கமேனி காயமடைந்திருக்கலாம்.. குறிப்பாக அவரது முகம் சிதைந்திருக்கலாம் என அமெரிக்கா நம்புகிறது. மோஜ்தபா கமேனி உயிருடனேயே இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரம் அவர் உயிருடன் இருந்தாலும் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய உடல்நிலையுடன் அவர் இல்லை என்றே தங்களுக்கு உளவுத் துறை தகவல்கள் வந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இதனால் ஈரானை இப்போது உண்மையில் யார் வழிநடத்துகிறார்கள் என்பதில் குழப்பமே தொடர்கிறது.
குறையாத செல்வாக்கு
மோஜ்தபா கமேனி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட ஈரானில் அவரது செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. போருக்கு நடுவிலும் கடந்த மாதம் பல ஆயிரம் பேர் தெருக்களில் திரண்டு வந்து புதிய சுப்ரீம் லீடருக்கான தங்களது விசுவாச உறுதிமொழியை அளித்துள்ளனர். முன்னால் சுப்ரீம் லீடரான அலி கமேனியின் மகன் தான் இந்த 56 வயதான மதகுரு மோஜ்தபா கமேனி.. தந்தையின் ஆட்சிக் காலத்தில் சுமார் 40 ஆண்டுகளாகத் திரைமறைவிலேயே செயல்பட்டு செல்வாக்கு மிக்க மதகுருவாகவே மோஜ்தபா கமேனி இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications