சானியாவை பிரிந்த சோயிப் மாலிக் நடிகையுடன் 3வது திருமணம்.. யார் இந்த சனா ஜாவேத் தெரியுமா?
இஸ்லாமாபாத்: இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சனா ஜாவேத் யார்? இருவருக்கும் இது எத்தனையாவது திருமணம்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பல சாம்பியன் பட்டங்களையும் வென்று அசத்தினார்.

இந்நிலையில் தான் கடந்த 2010ம் ஆண்டில் அவர் திருமணம் செய்தார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை அவர் கரம் பிடித்தார். இந்தியராக இருக்கும் சானியா மிர்சா, சோயிப் மாலிக்கை திருமணம் செய்தது அப்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
இருப்பினும் சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடினார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் இசான் மிர்சா மாலிக். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதி தொடர்பான விவாகரத்து செய்தி வெளியாகி வந்தது. குறிப்பாக சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக் தொடர்பான விபரம் மற்றும் அவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை நீக்கியது பரபரப்பை கிளப்பியது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில், ‛‛விவாகரத்து என்பது கடினமானது'' எனக்கூறி உருக்கமாக பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இது அவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் தான் இப்போது சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களின் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3வது திருமணம்: அதேபோல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், சானியா மிர்சாவை, சோயிப் மாலிக் பிரிந்து இருப்பதும் இந்த திருமணம் மூலம் உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சோயிப் மாலிக் 3வது திருமணத்தை செய்துள்ளார். சோயிப் மாலிக் முதலில் ஆயிஷா சித்திக் என்பவரை கரம் பிடித்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்த நிலையில் சோயிப் மாலிக் சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் சோயிப் மாலிக் திருமணம் செய்த நடிகை சனா ஜாவேத் யார்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சனா ஜாவேத் பாகிஸ்தானில் நடிகையாக இருக்கிறார். இவர் உருது மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2012ம் ஆண்டு அவர் 'ஷெர்-இ-ஜாத்' எனும் தொடர் மூலம் அறிமுகமாகி பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த Khanni எனும் காதல் சார்ந்த சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2020 அக்டோபர் மாதம் சனா ஜாவேத் பாடகர் உமைர் ஜாஸ்வாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கராச்சியில் உள்ள அவரது வீட்டில் எளிய முறையில் நடந்தது. இருப்பினும் இந்த திருமணம் என்பது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து தனித்தனியாக வாழ தொடங்கினர்.
இதற்கிடையே தான் சோயிப் மாலிக்குடன் சனா ஜாவேத் ‛டேட்டிங்' செல்வதாக தகவல்கள் பரவின. மேலும் கடந்த ஆண்டு சனா ஜாவேத் பிறந்தநாளுக்கு சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ‛‛Happy Birthday Buddy'' என அவர் கூறியிருந்தார். இதன்மூலம் இருவரும் நெருக்கமாக இருப்பது உறுதியாகி உள்ளது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications