“நெஞ்சு பதறுதே..” துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் - ஷாக் தரும் WHO
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் 20,000 பேருக்கும் மேல் உயிரிழந்து இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ள நிலையில், இதில் மொத்தம் 20,000 பேருக்கும் மேல் உயிரிழந்து இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறது.
நேற்று அதிகாலை துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்படத் தொடங்கிய நிலநடுக்கங்கள் இன்று வரை தொடர்ந்து வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இதுவரை 5,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.
அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளுக்கு மத்தியில் பன்னாட்டு உதவியுடன் துருக்கியில் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து நிலநடுக்கம்
துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் துருக்கியிலும், அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் இடிந்து விழுந்தன. அடுத்து 7.5 என்ற ரிக்டர் அளவில் 2 வது நிலநடுக்கம் ஏற்பட நிலைமை இன்னும் மோசமானது.

உருக்குலைந்த துருக்கி
3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகி அடுத்தடுத்து பேரழிவுகள் உருவாகின. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து பல முறை துருக்கியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக இடிந்து விழுந்தன.

5,000 அதிகமானோர் பலி
அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிடங்கள் இடிந்தும் நகரங்கள் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுகின்றன. 5,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

20,534 பேர் படுகாயம்
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கியில் 3,419 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 20,534 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாக துருக்கியின் துணை அதிபர் ஃபாத் ஆக்டே கூறி உள்ளார். அதேபோல் சிரியாவில் இதுவரை 1,602 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11,342 கட்டிடங்கள்
11,342 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இதில் 5,775 கட்டிடங்கள் இடிந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. தெற்கு துருக்கியில் 650 மைல் தூரம் வரை நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 5,021 பேர் உயிரிழந்து உள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

20,000 பேர் இறந்திருக்கலாம்
இந்த நிலையில், தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தில் 20,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவல் அனைவரையும் கூடுதல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications