இஸ்ரேலால் தொட கூட முடியாது! 300 அடி ஆழம்.. மேலே முழுக்க ஏவுகணைகள்.. இதுதான் ஈரானின் கடைசி அணு ஆயுத மையம்
தெஹ்ரான்: கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் தொடர்ந்தே வருகிறது. இதில் ஈரான் நாட்டின் பல அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை (Fordow Fuel Enrichment Plant) எனப்படும் ஒரு முக்கியமான தளம் இன்னும் தாக்கப்படாமல் உள்ளது. இது ஏன் முக்கியம்.. இதை ஏன் இஸ்ரேலால் தாக்க முடியவில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் நாட்டின் பல முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும் கூட ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை (Fordow Fuel Enrichment Plant) எனப்படும் ஒரு முக்கிய தளத்தை இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை.

ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை
இந்த ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை பலத்த பாதுகாப்புடன் ஒரு மலையின் ஆழத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு தளமாகும். வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே இந்த ஆலை கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் மட்டுமே அதை அழிக்கக்கூடிய திறன் உள்ளது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மோதலில் இஸ்ரேல் தனது ரகசிய நடவடிக்கைகள் மற்றும் ராணுவ வலிமையால் மேற்குலக நாடுகளை ஏற்கனவே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஃபோர்டோவின் பாதுகாப்பை மீறும் அளவுக்குச் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இல்லை என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எங்கே உள்ளது
ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை என்பது ஈரானின் மிகவும் ரகசியமான மற்றும் பலத்த பாதுகாப்புடைய அணுசக்தி நிலையங்களில் ஒன்றாகும். கோம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், தலைநகர் தெஹ்ரானிலிருந்து 160 கி.மீ தூரத்திலும் ஃபோர்டோ கிராமத்திற்கு அருகில் ஒரு மலையின் அடியில் இந்த ஆலை அமைந்துள்ளது. இது வான்வழித் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையிலேயே எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் முதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ஏவுகணை தளத்தின் ஒரு பகுதியாகும்
ரொம்ப சீக்ரெட்
கடந்த 2000களின் தொடக்கத்தில் "அமாத் திட்டம்" (Amad Plan) என்ற சீக்ரெட் திட்டத்தின் கீழ் ஃபோர்டோவை கட்ட ஈரான் தொடங்கியது. அணு ஆயுதங்களை உருவாக்குவது தான் இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். பல ஆண்டுகளாக இப்படியொரு இடம் இருப்பதையே ஈரான் உலக நாடுகளுக்குத் தெரியாமல் மறைத்தே வைத்திருந்தது.
2009ஆம் ஆண்டில் தான் மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகளால் இப்படியொரு இடம் இருப்பதையே கண்டுபிடிக்க முடிந்தது. அதன் பிறகே அதைச் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. இதுவே ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
இஸ்ரேலால் அழிக்க முடியாது
ஃபோர்டோ ஆலை சுமார் 80 முதல் 300 அடி ஆழத்தில் நிலத்தின் அடியில் அமைந்துள்ளது. இதைச் சாதாரண வெடிகுண்டுகள் மற்றும் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் எதுவும் செய்ய முடியாது.. இந்த ஆலை அதீத குண்டுவீச்சுகளைத் தாக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தை ரஷ்யாவின் S-300 அமைப்பு உட்படப் பல வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் பாதுகாக்கப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வாளர் நிக்கோலஸ் கார்ல் கூறுகையில், "வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் தெஹ்ரான் இந்த ஆலையைக் கட்டியுள்ளது. இதனால் ஃபோர்டோ மற்ற ஆலைகளை விட மிகவும் கடினமான இலக்காக உள்ளது" என்றார்.
ஒபாமா- டிரம்ப்
ஒபாமா அதிபராக இருந்த போது ஈரான் உடன் அணுசக்தி திட்டத்தைப் போட்டார். அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டோ ஆலையில் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. செறிவூட்டல் செயல்பாடு நிறுத்தப்பட்டு, ஐசோடோப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. அப்போது தான் 2018ல் அதிபர் டிரம்ப் தடாலடியாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகே ஈரான் மீண்டும் ஃபோர்டோவில் யூரேனியம் செறிவூட்டலைத் தொடங்கியது.
ஆபத்து
ஃபோர்டோ இப்போது ஈரானின் கடைசி மற்றும் மிக முக்கியமான செறிவூட்டல் மையமாக இருக்கிறது. இப்போது இந்த இடத்தில் தான் யுரேனியம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்படுகிறது.. இந்த மையத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் சுமார் 166 கிலோ யுரேனியம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்படுகிறது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான 90 சதவீதத்தை ஈரான் வேகமாக நெருங்கி வருவதையே இது காட்டுகிறது. இருப்பினும், பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதாலேயே இந்த இடத்தை இஸ்ரேலால் தாக்கி அழிக்க முடியாமல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications