கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தோல்வியடைந்தால் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? ஊழல் வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் நாட்டில் இன்று அக்டோபர் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாலை வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 4ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றாலும் இந்திய நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு மேல் டிரெண்ட் தெரிந்துவிடும்.. நாளை காலை தெளிவாக யார் முன்னிலை என்பது தெரிய வரும்.

இஸ்ரேல் பிரதமர்
இந்த தேர்தலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் மட்டுமின்றி, அவர் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சவால்களும் கவனம் பெற்றுள்ளன. 2023ல் காசா போர் தொடங்கியதற்கு பிறகு இஸ்ரேல் நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் இது. கடந்த மூன்று ஆண்டுகளில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராகவும், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதேபோல 2025 மற்றும் இந்தாண்டு அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டது.
இந்த சூழலில் தான் அங்கு தேர்தல் நடக்கிறது. தனது பதவியை தக்கவைக்க அவர் தீவிரமாக முயல்கிறார். இந்த தேர்தலில் வென்றால் அவர் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவியை தக்கவைப்பார். ஆனால், தேர்தலில் தோற்றால் சிக்கல் தான். அவர் எதிர்கொள்ளும் சட்ட வழக்குகள் அவரது அரசியல் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊழல் வழக்குகள்
நெதன்யாகு மீது இஸ்ரேலில் மூன்று ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. லஞ்சம், மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இஸ்ரேல் தொழிலதிபர் அர்னான் மில்சன், ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடமிருந்து நெதன்யாகுவும் அவரது குடும்பத்தினரும் பரிசுகளை பெற்றதாகவும், அதற்குப் பதிலாக சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
யெடியோத் அஹ்ரோனோத் செய்தித்தாள் வெளியீட்டாளர் அர்னான் மோசஸுடன் இணைந்து, தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட வைத்தாக நெதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, வால்லா செய்தி இணையதளத்தில் தனக்குச் சாதகமான செய்திகள் வெளியாக வேண்டும் என்பதற்காக அந்த ஊடகத்திற்கு சலுகை வழங்கினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்துள்ளார். தன் மீதான வழக்குகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
சர்வதேச கைது வாரண்ட் ஏன்?
கடந்த 2024 நவம்பர் 21ம் தேதி, காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. போரின்போது பொதுமக்களை திட்டமிட்டு குறிவைத்தல், கொலை, மனிதாபிமான உதவிகளை தடுத்தல், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், வழக்கம் போல இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது நடவடிக்கைகள் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டவை எனக் கூறுகிறது. இதற்கிடையே தென்னாப்பிரிக்கா தொடர்ந்த இனப்படுகொலை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது நெதன்யாகு தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் வழக்கிலிருந்து வேறுபட்டது.. எனவே, அந்த வழக்கம் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
தேர்தலில் தோற்றால் கைது செய்யப்படுவாரா?
இதில் இரண்டு விஷயங்களை நாம் பிரித்து பார்க்க வேண்டும். முதலில் இஸ்ரேலுக்குள் நடைபெறும் ஊழல் வழக்கு. இதில் நெதன்யாகு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைக்கலாம். ஆனால் தேர்தலில் தோற்பது மட்டுமே அவரை சிறைக்கு அனுப்பிவிடாது. உடனடி கைதும் நடக்காது. வழக்கின் விசாரணையும் நீதிமன்ற தீர்ப்புமே இதில் முக்கியம்.
இரண்டாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட். இஸ்ரேல் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடு அல்ல. சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பையும் இஸ்ரேல் ஏற்கவில்லை. எனவே, தேர்தலில் தோற்றாலே கைது செய்யப்பட மாட்டார். அதேநேரம் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு சென்றால், அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்படலாம். அப்போதும் கூட கட்டாயம் கைது என சொல்லிவிட முடியாது.
அடுத்து என்ன?
பிரதமர் பதவியை இழக்கும்போது அவரது பாதுகாப்புகள் மாறக்கூடும். ஆனால், அவர் தேர்தலில் தோற்ற உடனேயே கைது எல்லாம் செய்யப்பட மாட்டார். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் உள்ளே இறங்கி வலுக்கட்டாயமாக கைது செய்தால் மட்டுமே இது நடக்கும். ஆனால், அமெரிக்காவுடன் இஸ்ரேல் நல்லுறவையே வைத்திருப்பதால் இதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு!
எனவே, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் முடிவு நெதன்யாகுவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும். ஆனால் அவர் சிறைக்குச் செல்வாரா என்பது தேர்தல் முடிவை மட்டும் சார்ந்ததல்ல!


Click it and Unblock the Notifications
