இந்தியாவுக்கு மீண்டும் வரியா? முடிவு எட்டப்படாத புதின்-டிரம்ப் பேச்சுவார்த்தை! அடுத்து என்ன நடக்கும்
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து, உக்ரைன் போர் குறித்து அலாஸ்காவில் பேசியிருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போர் அடுத்து என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு மீண்டும் வரி விதிக்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழரை சனி என்பது உலகம் அறிந்த விஷயம்தான். அதேபோல, டிரம்ப் அதிபராக வந்த பிறகு, எதிரி நாட்டின் தலைவர்களுடன் திடீரென பேச்சுவார்த்தை நடத்துவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது திடீரென வடகொரியாவுக்கு சென்று அந்நாட்டு தலைவர் கிம் ஜான் உன்-ஐ சந்தித்தார். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான சந்திப்பாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பால் ஏதாவது பிரயோஜனம் ஏற்பட்டதா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது.

பேச்சுவார்த்தை
அதேபோல தற்போது புதினை நேரில் சந்தித்திருக்கும் டிரம்ப், ஏதேனும் ஒப்பந்தத்தை போட்டிருக்கிறாரா? என்று கேட்டால் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அலாஸ்காவில் உள்ள அங்கோரேஜில் சுமார் 3 மணி நேரம் இரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர். இரு தலைவர்கள் தரப்பிலும் தலா மூன்று பேர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அறிவித்தனர். ஆனால் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? ஏதேனும் ஒப்பந்தம் கையெழுத்தாகிருக்கிறாதா? அல்லது இனி வரும் காலங்களில் கையெழுத்தாக இருக்க திட்டமிடப்பட்டிருக்கிறதா? என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. தெளிவான பதில் இல்லாமல் இருவரும் இந்த பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு கிளம்பினர்.
உடன்பாடு எட்டப்பட்டதா?
டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் பல, பல விஷயங்களில் உடன்பாட்டை எட்டியிருக்கிறொம். பெரும்பாலான விஷயங்களில். சில முக்கியமான விஷயங்களில் இன்னும் முழுமையாக உடன்பாடு எட்டப்படவில்லை, ஆனால் நாங்கள் சில முன்னேற்றங்களைச் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இந்தியா மீது கூடுதல் வரியை விதிப்போம் என்று ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மீண்டும் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கச்சா எண்ணெய்யும் வரியும்
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. ரஷ்ய பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறின. ஆனால், அமெரிக்கா இன்றும் கூட யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு போன்ற அணுசக்திக்குத் தேவையான பொருட்களை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிபொருளை வாங்கி வருகின்றன. இந்த நாடுகளிலிருந்து மறைமுகமாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய்யும், எரிவாயும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தியா மீது கடுப்பு
இதெல்லாம் நடந்தாலும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் அந்நாடு பொருளாதார ரீதியில் பலமாக இருக்கிறது. எனவே எண்ணெய் வாங்க வேண்டாம் என அமெரிக்கா வார்னிங் கொடுத்தது. மத்திய அரசோ அதை கண்டுக்கொள்ளவில்லை. எனவே இந்தியா மீது 50% வரியை அமெரிக்கா போட்டிருக்கிறது. இப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த வரி உயராலம். ஆனாலும் அதைபற்றி மத்திய அரசு கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.
கண்டுக்கொள்ளாத இந்தியா
காரணம், அமெரிக்கா பேச்சை கேட்டு எண்ணெய் கொள்முதலை நிறுத்தி, வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கினால் அது விலை அதிகமாக இருக்கும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும். அடுத்தடுத்து பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வர இருப்பதால் இந்த விலை உயர்வை மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான், ரஷ்யாவை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications