உலக பொருளாதார வளர்ச்சியை பின்னோக்கி இழுத்த வர்த்தக போர்.. இதுக்கு டிரம்ப் சும்மாவே இருந்திருக்கலாம்
வாஷிங்டன்: வர்த்தகப் போர் காரணமாக 2025ம் ஆண்டிற்கான உலக பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.3% ஆக, உலக வங்கி குறைத்துள்ளது. டிரம்ப் உருவாக்கிய வரி போர்தான், உலக வங்கி குறிப்பிடும் வர்த்தக போருக்கு அடிப்படை.

வர்த்தகப் போரால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவு
அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்கள் காரணமாக, 2025ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை, உலக வங்கி கடுமையாகக் குறைத்துள்ளது. முன்னதாக 2024ம் ஆண்டில் 2.8% ஆக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி, தற்போது 2.3% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரமும் கணிசமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி 1.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் வேகத்தில் பாதியாகும். உலக வங்கி டொனால்ட் டிரம்ப் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகள் மீது புதிய வரிகள் விதிப்பது உட்பட, வர்த்தக தடைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இது பொருளாதார மந்தநிலைக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
இந்த வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளன. மேலும், மற்ற நாடுகளின் வரி பதிலடி நடவடிக்கைகளைத் தூண்டி, உலக வர்த்தக இயக்கததை மேலும் பாதித்துள்ளது.
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்தர்மிட் கில், இது பற்றி கூறுகையில், "உலக பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை கொந்தளிப்பில் சிக்கியுள்ளது. சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மக்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய அடி விழும்" என்றும் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், டிரம்பின் வரிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரிகளை விதிக்க டிரம்புக்கு உரிமை இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
டிரம்ப் விதித்த வரிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவர் தனது அதிகார வரம்பை மீறி வரி விதித்ததாகக் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், "கனடா, சீனா மற்றும் மெக்சிகோ மீது வரி விதிக்கப்பட்டது அரசின் முடிவு. இதை நிறுத்த முடியாது" என்று கூறியுள்ளது.
இந்த வரிகள் அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுமா என்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், மேல்முறையீடுகள் நடந்து கொண்டிருக்கும்போது வரிகள் அமலில் இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிற்குப் பதிலாக 11 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரிக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வாதங்களைக் கேட்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
கனடா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்க எல்லைகளில் சட்டவிரோதமாக ஃபென்டானில் (fentanyl) கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்த வரிகள் விதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். ஆனால், இந்த மூன்று நாடுகளும் இதை மறுத்துள்ளன. மேலும், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்து வர்த்தக நாடுகள் மீதும் வரிகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications