கொரோனா.. உலகில் 96.99 லட்சம் பேர் பாதிப்பு.. புதிய உச்சம் தொட்ட இந்தியா
பிரேசிலியா: உலகில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 5124 பேர் பலியாகி உள்ளனர். இதில் மிக உச்சபட்சமாக பிரேலில் 1,180 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 97 லட்சத்தை தொட்டுள்ளது. விரைவில் ஒரு கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.
கொரோனாவால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,76,907 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக பிரேசிலில் 40,673 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,907 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் 3வது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில், ஒரே நாளில் 18,185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பை பொறுத்தவரை உலகிலேயே மிக அதிகபட்சமாக பிரேசிலில் நேற்று 1,180 பேர் பலியாகினர். அடுத்தாக மெக்ஸிகோவில் 947 பேரும், அமெரிக்காவில் 595 பேரும் உயிரிழந்தனர். இந்தியாவில் 401 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,308 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 491,170 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. முன்பு ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, இப்போது இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகில் கொரோனாவில் இருந்து 52,51,111 குணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 39,57,531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,90,933 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவால் 5124 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications