அச்சமூட்டும் கொரோனா.. எச்சரிக்கை விடுத்த ஹூ.. ஆசியா ஐரோப்பாவில் திடீரென உயரும் பாதிப்பு எண்ணிக்கை..!
டெல்லி : ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் தென்கொரிய நாட்டில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 4 லட்சமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு
இந்நிலையில் தான் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கண்டங்களில் ஒன்றான ஆசிய கண்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதே போலவே ஐரோப்பா கண்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் ஐந்தே முக்கால் லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் உச்சம்
பிரான்ஸ் நெதர்லாந்து ஆஸ்திரேலியா ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்தபடி உள்ள நிலையில் ஜெர்மனியில் மட்டும் நேற்று சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் மட்டும் பாதிப்பு உச்சம் அடைந்து உள்ள நிலையில் அங்கு வசிக்கும் 20 மக்களின் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளன. ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் முடிவு வெகு தொலைவில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

4வது அலை
மேலும் கடந்த சில நாட்களாகவே வாராந்திர கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள அந்த அமைப்பு தொற்று நோயின் கடுமையான முகத்தை காட்டிய நிலையில் இந்த ஆண்டு முடிவடையும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் நான்காம் அலை ஏற்படுமா என்ற கவலை நிலவுவதாகவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications