அங்கோர் வாட் போல அமெரிக்காவில் பிரம்மாண்ட இந்து கோவில்.. அக் 8ல் குடமுழுக்கு.. என்னென்ன சிறப்பம்சம்
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்கு அக்டோபர் 8ஆம் தேதியன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள மிக பிரம்மாண்டான இரண்டாவது இந்து கோவிலாக இது திகழ்கிறது.
கம்போடியாவில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில், புராதானப் பின்னணியில் உலகின் மிகப்பெரும் இந்துக் கோயிலாகும். 500 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கம்போடியா கோயிலுக்கு அடுத்தபடியாக, தற்போதைய நியூஜெர்சி கோயில் வருகிறது.

நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி நகரத்தில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 12,500 பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உழைப்பால் உருவாகி உள்ளது. 2011ல் தொடங்கிய இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள், 12 ஆண்டுகள் நிறைவில் 2023-ல் தற்போது குடமுழுக்கு காண இருக்கிறது.
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலிருந்து 90 கிமீ தொலைவில், சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலின் அமைவிடம் உள்ளது. இந்து வேதங்களின் வழிகாட்டுதல்கள், வைதீக நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, சகலத்திலும் பண்டைய இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இக்கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அக்ஷர்தாம் கோவில் BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் அமைப்பால் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் ஸ்வாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கோவில், அவருடைய 5வது ஆன்மீக வாரிசு மற்றும் புகழ்பெற்ற துறவியான பிரமுக் ஸ்வாமி மஹாராஜாவால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அக்ஷர்தாம் எனப் பிரபலமான இந்த ஆலயம் 183 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கிறது மற்றும் பண்டைய இந்து வேதங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்திய கலாச்சாரத்தின் படி பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 10,000 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், ஒன்பது கோபுர கட்டமைப்புகள் ஆகியவை 183 ஏக்கர் பரப்பளவிலான இந்த கோயில் வளாகத்தில் அடங்கியிருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பளிங்கு, கிரானைட் மட்டுமன்றி, கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான சுண்ணாம்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல் உள்ளிட்டவையும் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு கல், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை கொண்டு செல்லப்பட்டு கட்டுமானப்பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவிற்காக இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று குடமுழுக்கு காணும் இந்த கோயில், அக்டோபர் 18 முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications