கேரிபேக்கிற்குள் 'மம்மி'.. தெறித்து ஓடிய கும்பல்.. இளைஞர் சொன்னதை கேட்டு உறைந்து நின்ற போலீஸ்.. ஷாக்
பெருவில் மம்மியை தனது டெலிவரி பேக்கில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
லிமா: பெரு நாட்டில் 800 ஆண்டுகள் பழமையான 'மம்மியை' உணவு டெலிவரி பேக்கில் வைத்து இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாம் ஏராளமான சடங்குகளை பின்பற்றுகிறோம். ஆனால் நாம் குரங்கிலிருந்து மனிதர்களாக வளர்ந்த காலத்தில் அதாவது நாகரிக சமூகமாக உருவான சமயத்தில் நாம் செய்த முதல் சடங்கு என்பது, இறந்தவர்களை விரிவான முறையில் புதைத்தல்தான். உலகில் வேறு எந்த உயிரினமும் தன்னுடைய இனத்தில் ஒரு உயிர் இறந்துவிட்டால் அதனை அடக்கம் செய்யாது. நாம் மட்டும்தான் இதனை செய்கின்றோம்.
ஆனால் இப்படி அடக்கம் செய்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பது என்பது, நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆமாம் மக்களே தொல்பொருள் ஆராய்ச்சிக்கு மம்மியை தோண்டி எடுத்த காலம் போய் பொழுது போக்குக்காக அதனை சிலர் தற்போது தோண்டி எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் பெரு நாட்டில் அரங்கேறியிருக்கிறது.

மது
பெரு நாட்டின் புனோ பகுதியில் ஒரு தொல்பொருள் ஆய்வு கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மது அருந்தி கொண்டிருந்தார். இந்த இளைஞர் உணவு டெல்வரி வேலை செய்து வருகிறார். எனவே இவருடன் டெலிவரி பேக் இருந்துள்ளது. கொளுத்தும் வெயிலில் நண்பர்களுடன் கூலாக மது அருந்திக் கொண்டிருந்த இளைஞரை காவல்துறையினர் திடீரென சுற்றி வளைத்து கைது செய்தனர். விஷயம் புரியாத நண்பர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாய் சிதறி ஓட இளைஞரை காவல்துறையினர் தங்களுடன் அழைத்து சென்றனர்.

விளக்கம்
பின்னர் காவலர்கள் கொடுத்த விளக்கத்தில்தான் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது இந்த இளைஞரின் டெலிவரி பேக்கிலிருந்து சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை தாங்கள் மீட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விளக்கியதாவது, "எங்களுக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தொல்பொருள் ஆய்வு கட்டிடத்திற்கு அருகில் உள்ள பார்க்கில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் இளைஞர் தன்னுடன் மம்மியை வைத்துள்ளார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

கைது
தொடக்கத்தில் இது போலியான அழைப்பாக இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. இருப்பினும் சம்பவ இடத்திற்கு போய் ஒரு எட்டு பார்த்துவிடலாம் என்று பார்க்குக்கு வந்தபோது அந்த மர்ம நபர் கூறியதை போல சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். மேலும் நாங்கள் அந்த இளைஞர்களிடம் விசாரித்தபோது அவர்களில் டெலிவரி ஊழியர் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனையடுத்து அவரது பேகை பரிசோதித்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பேக்கில் ஒரு மம்மி இருந்தது. இதனைய கண்ட மற்ற இளைஞர்கள் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டனர்.

விசாரணை
நாங்கள் டெலிவரி வேலை செய்யும் இளைஞரை கைது செய்து விசாரிக்கையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த மம்மியை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனது தந்தை இங்கு கொண்டு வந்தார் என்றும், இதனை தான் காதலிக்க தொடங்கிவிட்டதாவும் கூறியுள்ளார். மட்டுமல்லாது இந்த மம்மிக்கு அவர் 'ஜுவானிட்டா' என்று பெயரையும் சூட்டியுள்ளார். ஆனால் இது ஒரு ஆண் மம்மி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மம்மி 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெரு கலாச்சாரம்
ஸ்பானியர்கள்தான் பெரு நாட்டை ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்த இனக்குழுக்கள் எகிப்தியர்களை போலவே தங்கள் மூதாதையர்களை மண்ணில் அடக்கம் செய்யமல் ஒரு பெரிய பானையில் போட்டு வைத்து அடக்கம் செய்தனர். அப்படி அடக்கம் செய்யப்பட்ட ஒரு உடல்தான் டெலிவரி வேலை செய்யும் இளைஞர் வைத்திருந்திருக்கிறார். தற்போது இந்த மம்மி அந்நாட்டு தொல்லியில் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications