ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் ஷாக்.. ஈரானின் அணு நிலையம் மீது 4 முறை தாக்கிய அமெரிக்கா - இஸ்ரேல்!
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Bushehr அணுசக்தி நிலையம் அருகே அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வெளியிட்ட தகவலின்படி, புஷெர் அணு மையம் இன்று காலை மொத்தம் நான்கு முறை தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் அரசு ஊடகமான தாஸ்னிம் நியூஸ் ஏஜென்சி தெரிவிக்கையில், அணு நிலையம் அருகே ஏவுகணை தாக்கியதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

ஈரானின் புஷெர் அணு மையம் என்பது அந்த நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே அணு மின் நிலையமாகும். இது புஷெர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 2.2 லட்சம் முதல் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர், மேலும் இது ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றாகும்.
புஷெர் பகுதி, அணு மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், ஈரானின் தொழில்துறை மற்றும் ராணுவ ரீதியாக மிக முக்கியமான பகுதியாகவும் விளங்குகிறது. இந்த அணு நிலையம் நாட்டின் மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதன் புவியியல் அமைப்பும் முக்கியமான பாதுகாப்பு பகுதியாக கருதப்படுகிறது.
இதனால், புஷெர் அணு நிலையம் மீது ஏற்படும் எந்தவொரு தாக்கமும், ஈரானின் ஆற்றல் பாதுகாப்பை மட்டுமின்றி, முழு வளைகுடா பகுதிக்கும் பாதிக்கும் திறன் கொண்டதாக கணக்கிடப்படுகிறது.
மேலும் இன்றைய தாக்குதலில் உயிரிழந்தவர் அந்த அணு நிலையத்தின் பாதுகாப்பு பணியாளர் என்பதை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அணு மையத்தின் ஒரு கட்டிடத்தில் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதல் அணு நிலையத்தின் முக்கிய அமைப்புகளை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும், கதிர்வீச்சு பாதுகாப்பு கோணத்தில் இது மிகப்பெரிய கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
Bushehr அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் ஏற்பட்டிருந்தாலும், தற்போது எந்தவிதமான கதிர்வீச்சு அபாயமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணு மையத்தின் முக்கிய செயல்பாடுகள் பாதுகாப்பாக உள்ளன.
இது சர்வதேச அளவில் அச்சத்தை அதிகரிக்கும் செய்தியாக இருப்பதை தாண்டி, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயம் ஈரானுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் எழுந்துள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தனது எக்ஸ் பதிவில், இந்த தாக்குதல் ஈரான் மட்டுமின்றி முழு வளைகுடா பிராந்தியத்திற்கும் பெரும் அபாயத்தை உருவாக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
அவர் மேலும், உக்ரைனில் உள்ள Zaporizhzhia Nuclear Power Plant மீது சர்வதேச கவனம் அதிகமாக இருந்தபோது, ஈரானின் அணு நிலையம் மீது தாக்குதல் நடந்திருக்கும் வேளையில் உலக நாடுகள் எவ்விதமான அச்சத்தையும் காட்டாதது உலகின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என விமர்சித்தார்.
இந்த தாக்குதலை தாண்டி, ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி மையங்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தாக்குதலின் உண்மையான நோக்கம் பொருளாதாரத்தையும், எனர்ஜி துறையையும் பாதிப்பதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புஷெர் அணு மையம் அருகே நடந்த இந்த தாக்குதல், அணு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விஷயமாக மட்டும் இல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினையாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. தற்போதைக்கு கதிர்வீச்சு அபாயம் இல்லையெனினும், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications