வன்னியர்-விசிக அரசியலுக்குள் சிக்கும் ஜெய்பீம், சோதனையா?.. சாதனையா?
ஜெய்பீம் ரசிகர்களின் விமர்சனங்களைத்தாண்டி அரசியல் விமர்சனங்களுக்குள் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சிறந்த படைப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதில்லை, ஆனால் எப்படிப்பட்ட விமர்சனம் என்பதில்தான் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் சூர்யா மீது பாமகவினர் காட்டும் எதிர்ப்பு, பாஜக காயத்ரி ரகுராம், எச்.ராஜா போன்றோர் விமர்சனம் வைக்கின்றனர். தற்போது அற்புதமான கதையமைப்பு கொண்ட யதார்த்தை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் சிக்கலில் சிக்கியுள்ளது. இது சாதகமா? பாதகமா? நெகட்டிவ் விமர்சனங்கள் படத்துக்கு வெற்றியைத் தருமா என்பது போகப் போகத்தெரியும்.
ஜெய்பீம் திரைப்படம் அரசியல் பேசவில்லை, ஆனால் அரசியலுக்குள் சிக்கிக்கொண்டது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் இருளர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காவல்துறைக்கு எதிராக நடத்தப்படும் சட்டபோராட்டம், சாமானிய பெண்ணுக்கு கிடைத்த நீதி, நீதிமன்றத்தின் நியாயமான பார்வை ஒரு எளிய இருளர் பெண்ணுக்கு நீதி வாங்கித்தருவதை அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் கண்டு வியந்தவர்கள் அதை வெகுவாக பாராட்டினர்.

படத்திl எளிய மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் வழக்கறிஞர் சந்துரு கேரக்டரில் வந்து மனதை அள்ளுகிறார் சூர்யா. அதே நேரம் மறுபுறம் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் சாதாரண இருளர் இன மக்கள் படும்பாட்டை, சிறிய விஷயத்தில் கூட ஜாதிய வன்மம் உமிழப்படுவதை தலைகுனிந்து விதிக்கப்பட்டது இதுதான் என அம்மக்கள் கடந்துச் செல்வதை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.
சிறு சிறு காட்சிகள்கூட அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர்தான் கதை தொடங்கும். ஊர் பெரிய மனிதர் வீட்டில் திருட்டு நடக்க, வழக்கமாக காவல் உயர் அதிகாரிகள் பிரஷர், ஏழை தலைகாய்ந்த மக்கள் மீது சந்தேகம் கொண்டு முறைகேடாக கைது செய்து லாக்கப்பில் அடைத்து வைத்து கொடுமை செய்வது உள்ளிட்ட காட்சிகளில் படம் வேகம் எடுக்கிறது.
படத்தில் காட்சிக்கு காட்சி அளந்து நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தாலும் படம் மனதில் பதிவதற்கு காரணம் அது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது, அதில் ஏழைப்பெண்ணுக்காக வாதாடி வென்றவர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்கிற ஆர்வம். வாச்சாத்தி கொடுமைகளும், வீரப்பன் வேட்டையின்போது நடந்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வைக்காண போராடிய மண்ணில் ஒரு ஓரத்தில் ஒளிக்கீற்றாய் சட்டத்தின் மூலம் கொடியங்குளம் இருளர் இனப்பெண்ணுக்கு உண்மையிலேயே முன்னாள் நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக நியாயம் கிடைக்க பட்டப்பாட்டை படமாக வடித்துள்ளதால் சுவாரஸ்யம் கூடியது.
படம் எடுக்கப்பட்ட விதம், கதாபாத்திரங்கள் தேர்வு, வசனம், காட்சி அமைப்பு அனைத்தும் நம் அனைவர் மனதிலும் ஒரு அழுத்தத்தை உண்டு பண்ணியது என்றால் மிகையாகாது. படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் தனது இளம் பருவத்தில் மிசாக் கொடுமைகளை அனுபவித்த சிறைக்கொட்டடி தன் நினைவுக்கு வருவதாக பதிவு செய்தது படத்தின் ஆழத்தை நமக்கு உணர்த்தும்.
அனைவரும் அதிர்ந்துத்தான் போயினர், காரணம் கதை அமைப்பும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் நியாய மனமுள்ள எவரையும் கலங்கவைத்து விடும். படத்தைப் பார்த்து பாராட்டாத அரசியல் கட்சித்தலைவர்களே இல்லை எனலாம். சிலர் ஓரிருக்காட்சிகளை வைத்து குற்றம் சொன்னபோது அதற்கு படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் சொன்ன பதிலைத்தவிர பொருத்தமான ஒன்றை சொல்ல முடியாது. அவர் சொன்னது, படத்தில் மனதை கலங்கடிக்கும் எத்தனையோ காட்சிகள், படத்தின் கதை உள்ளிட்டவை உள்ளபோது சிறு காட்சியை வைத்துக்கொண்டு விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது என்று கூறியிருந்தார்.
இந்தப்படத்தின் மையக்கரு கூறுவது சாமானிய மக்களுக்கு நியாயம் சாதாரணமாக கிடைக்காது, அதை போராடித்தான் பெற வேண்டும். அதற்கு முன் அவர்கள் கொடுக்கும் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் ஒரு அநியாயத்திலிருந்து பெறப்படும் நியாயம் தீர்வு வேறொரு அநியாயம் நடக்காமல் தடுக்கவாவது பயன்படுமே என்பதே. இப்படத்தில் நியாயம் சாதாரணமாக சினிமாக்காட்சிகளில் வருவது போல் ஒரு ஹீரோ 100 பேரை அடித்து துவம்சம் செய்து முடிவில் நியாயம் கிடைப்பதுபோல் எடுக்கவில்லை.
சட்டப்போராட்டம் ஒருபுறம் நடக்கும்போதே மறுபுறம் மக்கள் போராட்டமாக இந்தப்பிரச்சினை உருவெடுப்பதையும், அதனால் அதிகார வர்க்கம் வேறு வழியில்லாமல் மெல்ல பணிவதையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது பலராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதற்காகத்தான் இப்படம் கொண்டாடப்படுகிறது. அனைத்து இயக்கங்களும் சாமானிய மக்களுக்காக போராடுகின்றன. அதனால் இயற்கையாகவே படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
அரசியல் இல்லாமல் அரசியல் கட்சிகளின் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது இப்படம். காரணம் சில கேரக்டர்களுக்காக வைக்கப்பட்ட பெயர் அதைவிட சில காட்சிகளை வேண்டுமென்றே பதிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படும் விமர்சனம், விமர்சனம் வந்தப்பின் அக்காட்சிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இயக்குநர் முன்னரே இதுபோன்ற காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்கிற வாதம் சிலரால் வைக்கப்படுகிறது.
ஒரு சம்பவத்தை அதன் நியாயத்தை மிக நேர்த்தியாக சொல்லும்போது சில காட்சிகள் சிலரது எதிர்ப்பை சம்பாதிக்கும் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் தேவையில்லாமல் சில சமூகங்களை ஏன் குறைத்துக் காட்டவேண்டும் என்று சிலர் எழுப்பும் வாதத்தையும் ஒத்தி வைக்க முடியாது. உண்மையில் கொடுமை புரிந்த எஸ்.ஐயின் பெயர் அந்தோணி சாமி, ஆனால் அதை குருமூர்த்தியாக்கி அவர் வீட்டில் அக்கினி சட்டி காலண்டரை வைப்பதன் நோக்கம் என்ன? என்று பாமகவினர் எழுப்பும் கேள்வியாக உள்ளது.
ஒரு நல்ல படைப்பு இதுபோன்ற பல விஷயங்களை தவிர்க்க வேண்டும். காரணம் கதையின்படி அப்படி இல்லை எனும்போது தேவையற்ற திணிப்பு என்கிற வாதம் வைக்கப்படுகிறது. அதே நேரம் இதுகுறித்த அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு பதிலளித்த சூர்யா விளக்கத்தை அளித்து, அதுகுறித்த காட்சிகளும் நீக்கப்பட்டதாக ஜெய்பீம் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிலும் சர்ச்சை கிளப்பியுள்ளார் எச்.ராஜா. அக்கினி சட்டியை எடுத்துவிட்டு அங்கு ஏன் லட்சுமி படத்தை வைத்தீர்கள் என்று அவர் பிரச்சினை கிளப்பியுள்ளார்.
ஜெய்பீம் ரசிகர்களின் விமர்சனங்களைத்தாண்டி அரசியல் விமர்சனங்களுக்குள் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சிறந்த படைப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதில்லை, ஆனால் எப்படிப்பட்ட விமர்சனம் என்பதில்தான் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் சூர்யா மீது பாமகவினர் காட்டும் எதிர்ப்பு, பாஜக காயத்ரி ரகுராம், எச்.ராஜா போன்றோர் விமர்சனம் வைக்கின்றனர். தற்போது அற்புதமான கதையமைப்பு கொண்ட யதார்த்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் சிக்கலில் சிக்கியுள்ளது. இது சாதகமா? பாதகமா? நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலில் லாபத்தை தருமா என்பது போகப்போகத் தெரியும்.
தற்போது அன்புமணி ராமதாஸ் போன்றோர் எதிர்ப்பதும், வன்னியர் சங்கம் வழக்கு போட்டுள்ள நிலையிலும், விசிக திருமாவளவன் வாழ்த்தியுள்ளதும், ஜெய்பீம் படம் தாமாக அரசியல் சூழலில் படைப்புவாதிகள் சிக்குகிறார்களோ என்கிற எண்ணம் பரவலாக எழுகிறது. வாதம், எதிர்வாதம் காரணமாக ஜெய்பீம் படம் சோதனைக்குள்ளாகியுள்ளதா? அல்லது எதிர்விமர்சனமும் திரைப்படம் வெற்றிக்கு சாதனையாகியுள்ளதா போகப்போக தெரியும்.


Click it and Unblock the Notifications
