"எங்கள் ஓட்டு சிவசண்முகத்துக்கே".. சுயேச்சைக்கு மக்கள் ஆதரவு.. விழிபிதுங்கும் கட்சிகள்.. யார் இவர்?
காஞ்சிபுரம்: வீட்டு வாசலில் சுயேச்சை வேட்பாளர் பெயரை கோலம் போட்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தாய்மார்களால் விழி பிதுங்கி நிற்கிறார்கள் இதர கட்சியினர்.
Recommended Video
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளுக்கு வருகிற 19-ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 2011ம் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2016-க்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் காஞ்சிபுரம் நகர்ப்புறத்திலுள்ள மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு காஞ்சிபுரம் பெரு நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் நடையாய் நடந்தும் பெரும்பாலான வசதிகள் கிடைக்காமல் இருந்தது. மேலும் காஞ்சி நகர மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்த போது அரசியல்வாதிகளை தேடிச் செல்லும் நிலையில் அரசியல்வாதிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் பல ஆயிரங்களை செலவு செய்தனர்.

அத்தியாவசிய தேவைகள்
இதனால் பெரும் ஆதங்கத்தில் காஞ்சி நகர மக்கள் இருந்த நிலையில் தற்போது நடைபெறக் கூடிய இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளில் அடிப்படை வசதிகளுக்காக பல இளைஞர்கள் சமூக வலைதள மூலமாகவும் ஆர்டிஐ மூலமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சென்று அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுத்ததன் காரணமாகவும் பல இளைஞர்கள் காஞ்சி நகர மக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள்.

10 ஆண்டுகள்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வசதிபடைத்த முதியோர்கள் என அதிகம் வசிக்ககூடிய ஒரு பெரும் பகுதியானது 44-வது வார்டில் உள்ள வேதாச்சலம் நகர். இந்த வார்டில் அடிப்படை வசதிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இவர்கள் பல லட்சம் ரூபாயை செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தூர்வாரப்படாத வடிகால்கள்
ஆனால் இப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு என்பது பெரியதாக முன்னேற்றம் அடையவில்லை மழைநீர் வடிந்து செல்லும் கால்வாய் கூட தூர்வாரவில்லை. மழை காலங்களில் மழைநீர் நகருக்குள் தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசும், குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்காக்கள் முறையாக பராமரிப்பதில்லை, விஷ ஜந்துக்கள் பூங்காவில் வலம் வரும் சூழலில் கடந்த 10 ஆண்டுகளில் அந்த வார்டு பகுதி மக்கள் முகம் சுளித்து இருந்தார்கள். அப்போது அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சிக்கு அப்பகுதி மக்களின் சார்பாக தனது 24 வயதில் இருந்தே குரல் கொடுத்து வந்தவர் சண்முகம் என்கிற சிவசண்முகம் மற்றும் அவரது நண்பர்கள்.

சிசிடிவி கேமராக்கள்
அப்பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்தது, குற்றச்செயல்களை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நகர் முழுவதும் சிசிடிவி கேமிராக்களை அமைத்தது, கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களுக்கு உணவு அளிப்பது, தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்வது, மழைநீர் கால்வாய் தூர்வாரி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது, மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் உடனடியாக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது என அந்த பகுதிக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை சிவசண்முகமும் அவரது நண்பர்களும் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

வார்டு முழுவதும் செல்வாக்கு
தாய் தந்தை இல்லாத சிவசண்முகத்தை அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளையாகவே பார்த்து வருகின்றனர். இந்த வார்டு முழுவதுமே தனது வீடு என்ற எண்ணத்தில் இருந்த சிவசண்முகத்தை அப்பகுதி மக்கள் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது அந்த பகுதியில் அதிமுக, திமுகவிற்கு எதிராக பெரும்பகுதியான மக்களின் ஆதரவோடு சுயேச்சையாக காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் காண்கிறார்.

வாசலில் கோலமிட்ட மக்கள்
இதனால் கலக்கமடைந்த இரு கட்சியினரும் சிவசண்முகத்தை தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக கணிசமான தொகையும் கொடுக்க முன்வருவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் மறைமுகமான மிரட்டலுக்கும் பணத்திற்கும் எதற்கும் அசைந்து கொடுக்காத சிவசண்முகம் தேர்தலிலிருந்து வாபஸ் வாங்கவில்லை. இந்த தகவல் வேதாசலம் நகர் பகுதியில் உள்ள தாய்மார்களின் கவனத்திற்கு சென்றதன் அடிப்படையில் தங்களின் வீட்டு வாயிலில் எங்கள் ஓட்டு சிவ சண்முகத்திற்கு தான் என்கின்ற வாசகத்தோடு தாய்மார்கள் கோலம் போட்டு சுயேச்சை வேட்பாளர் சிவசண்முகத்திற்கு தற்போது பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை பார்த்து செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் இதர கட்சியினர்.












Click it and Unblock the Notifications