பாமக ஆளும் கட்சியாக வர வேண்டும்! ஆசையை பகிர்ந்த அன்புமணி ராமதாஸ்! நிர்வாகிகளுடன் சந்திப்பு!
காஞ்சிபுரம்: தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்சியாக அதுவும் ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
கடந்த சில நாட்களாக அன்புமணி ராமதாஸ் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் தனது மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். பாமகவை பொறுத்தவரை 3-வது பெரிய கட்சியாக இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் முதல் கட்சியாக அதுவும் ஆளும் கட்சியாக பாமக முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் தெரிவித்தார்.

வளர்ச்சிப் பணிகள்
மேலும், பாமக வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வன்னிய இட ஒதுக்கீட்டுக்காக பாமக முன்னெடுத்த பல்வேறு கட்ட முயற்சிகள் பற்றியும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். இதனிடையே அன்புமணி ராமதாஸ் மேடையில் அமர்ந்திருந்த போது மனநலம் பாதிக்கப்பட்டதை போன்று காட்சியளித்த ஒருவர், திடீரென அன்புமணி காலில் விழுந்தார். அவர் மேடையை விட்டு செல்ல மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

பாமக தொண்டர்கள்
இதையடுத்து பாமக தொண்டர்களும், அன்புமணியின் பாதுகாப்பு வந்திருந்த காவலர்களும் குண்டு கட்டாக அந்த நபரை மேடையிலிருந்து கீழே தூக்கிச் சென்று விட்டு வெளியே அனுப்பினர். இந்த நிகழ்வால் பாமக நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அது தொடர்பாகவும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அன்புமணி பரபரப்பு
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் பரபரப்பாக கடந்த சில நாட்களாக கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது. வடதமிழகம் மட்டும் இல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் விரிவான பயணத் திட்டம் ஒன்றையும் அவர் வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications