பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிர்ப்பு? தீவிரமடையும் போராட்டம்! தீர்மானம் போட்ட து.தலைவர் திவ்யா தற்கொலை
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவில் தீவிரமாக பணியாற்றி வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான திவ்யா திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்டம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போராட்ட குழு கூறியுள்ள நிலையில், போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்தது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. முன்னதாக டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது. இதன் சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கடந்த இரண்டு ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக தமிழக அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து அப்பகுதி மக்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்ட குழுவில் முக்கிய நபராக திகழ்ந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான திவ்யா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவில் முக்கிய பங்காற்றிய கணபதியின் மனைவிதான் திவ்யா. பரந்தூர் விமான நிலைய பணிகளுக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு உறுதுணையாக இருந்தவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில் திங்கட்கிழமை மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கு காரணம் என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. தற்போது தமிழக அரசின் சார்பில் பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாகவே திவ்யா மன உளைச்சலில் இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு அறிவித்திருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் திவ்யா தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அதற்கான கடிதம் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள போலீசார், குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications