"ஆடு".. ஹையயோ.. பக்கத்து வீட்டுக்கு ஓடிய வசந்தா கண்ணீர்.. அந்த ஆட்டுக்குட்டியும் பாட்டியும்.. செம்ம
4 கால்கள் இன்றி பிறந்த ஆட்டுக்குட்டியை பாசத்துடன் வளர்த்து வருகிறார் ஒரு பாட்டி
காஞ்சிபுரம்: "4 கால்களுமே இல்லைன்னா என்ன? நான் இருக்கேன் உனக்கு" என்று ஆட்டுக்குட்டியை வாரி அரவணைத்து கொண்டார் ஒரு பாட்டி...!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் வசித்து வருகிறார் அந்த பாட்டி.. பெயர் வசந்தா மகாலிங்கம்.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. பெற்ற மகன்களும் இறந்துவிட்டார்கள்..
அதனால் இந்த பாட்டிக்கு என்று யாருமே துணை கிடையாது.. அதேசமயம், அடுத்தவர் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடுவதும் இந்த பாட்டிக்கு பிடிக்காதாம்..

மேய்ச்சல்
சொந்த உழைத்து சம்பாதித்து, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளார்.. அதனால், தள்ளாத வயதிலும் ஆடுகளை வளர்த்து அதன்மூலம், கிடைக்கும் வருமானத்தை வைத்தே பிழைப்பு நடத்தி வருகிறார்.. மொத்தம் 3 ஆடுகளை வைத்திருக்கிறார்.. இவைகளை மேய்ச்சலுக்கு இட்டுச்சென்று, கவனமாக வளர்த்து வருகிறார். இந்த 3 ஆடுகளில் ஒன்று இன்று அதிகாலை இரண்டு குட்டிகளை ஈன்றது.

ஆட்டுக்குட்டி
இது பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவிட்டது.. ஆனால், அதன்பிறகுதான் அந்த ஆட்டுக்குட்டிகளை கூர்ந்து கவனிக்கும்போது, இரண்டு குட்டிகளில் ஒரு குட்டிக்கு, 4 கால்களும் இல்லாமல் பிறந்துள்ளதை கண்டு அதிர்ந்துள்ளார். என்னசெய்வதென்றே தெரியாமல் அந்த குட்டியை கைகளால் எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தவர், திடீரென அழுகை முட்டிக் கொண்டு வந்துள்ளது.. அதனால், அக்கம் பக்கத்தினரிடம் சென்று, ஆடு ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நடந்த நிலையில் மற்றொரு ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டது, 4 காலுமே இல்லை என்று சொல்லி அழுதுள்ளார்.

பால் பாட்டில்
பிறகு, அவராகவே மனதை தேற்றிக் கொண்டு, குழந்தைகளுக்கு பாலூட்டும் பாட்டிலை தருமாறு கேட்டார்.. அவர்களும் தங்கள் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் பாட்டிலை, பாட்டிக்கு தந்தார்கள்.. அதை வாங்கி வந்த பாட்டி, தன் வீட்டில் இருந்த பாலை எடுத்து அந்த பாட்டிலில் ஆற வைத்து ஊற்றினார்.. பிறகு, கால்கள் இல்லாத அந்த ஆட்டுக்குட்டியை தூக்கி தன் மடியில் வைத்து பாலூட்டினார்.. அதற்குள் 4 கால் இல்லாமல் ஆட்டுக்குட்டி பிறந்துவிட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி, ஊர்மக்கள் திரண்டு வந்தனர்..

ஆடு + ஆட்டுக்குட்டி
அங்கே வந்து பார்த்தால், ஆட்டுக்குட்டிக்கு பாட்டி, பாட்டிலில் பாலூட்டி கொண்டிருப்பதை கண்டு மலைத்து போய் நின்றனர்.. இந்த காட்சி அனைவரையும் நெகிழ செய்துவிட்டது.. இதை பற்றி பாட்டி சொல்லும்போது, "எனக்கென்று யாருமில்லை... தனியாகவே வசித்து வருகிறேன்.. இந்த கால்நடைகள்தான் எனக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகின்றன.. ஆனால் இந்த ஆட்டுக்குட்டி கால்கள் இல்லாமல் பிறந்துவிட்டது.. மனசே சரியில்லை.. ஆனால், மனிதனே மாற்றுத் திறனாளியாக இருக்கும்பொழுது, அந்த மாற்று திறனாளிகள் எத்தனையோ பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்கும்போது, என் மனதை தேற்றிக்கொண்டேன்..

கறவை மாடுகள்
எப்படியும் இந்த ஆட்டுக்குட்டியை நான் காப்பாற்றி விடுவேன்.. ஆனால், அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில், கறவை மாடுகளை எனக்கு வழங்கினால் எந்தவித தடையும் இல்லாமல், இந்த ஆட்டுக்குட்டிகளை எல்லாம் நான் காப்பாற்றிவிடுவேன்.. என் வீட்டு குழந்தைகளை போல வளர்ப்பேன்" என்கிறார் நெகிழ்ச்சியுடன். ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் பாட்டியின், இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆங்காங்கே, பெற்ற பிள்ளைகளே, தங்கள் பெற்றோருக்கு சோறு போடாமல் அனாதையாக அலைய விடும் இந்த காலத்தில், கள்ளக்காதலனுக்காக, பச்சிளம் குழந்தைகளை அதன் அம்மாக்களே கொலை செய்யும் இந்த பயங்கரமான சமூகத்தில், ஜீவராசியின் மீது இந்த பாட்டி காட்டும் பாசம் மனதை பிசைந்தெடுத்துவிடுகிறது.. உண்மைதான்.. "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"












Click it and Unblock the Notifications