ரேஷன் கடைகளில் வரப்போகுது சூப்பர் வசதி.. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக காஞ்சிபுரத்தில் அறிமுகம்
காஞ்சிபுரம்: ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் அதாவது யுபிஐ மூலம் பணப்பரிவர்த்னை செய்யும் முறை தமிழகத்தில் முதல் முறையாக
காஞ்சீபுரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த யுபிஐ நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
ரேஷன் கடைகளில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முறைகேடுகளை தடுக்க கைரேகை வைத்தால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் ஆன்லைனிலேயே ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் செய்ய முடியும்.

இதேபோல் ரேஷன் கடைகளில் வழக்கமான பொருட்களுடன் கேழ்வரகு விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரேஷன் கடைகளில் தற்போது வரை ரொக்க பணப்பரிமாற்றமே இருக்கிறது. கியூ ஆர் கோடு வழியாக பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இதனை பரிசீலித்து வந்த அரசு விரைவில் கியூ ஆர் கோடு மூலம் அதாவது யுபிஐ மூலம் பணப்பரிவர்த்னை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடங்கி உள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும் இந்த முறை அமலபடுத்தப்படுகிறது.

இந்த திட்டம் காரணமாக இனி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முருகன், காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications