மிஸ்ஸான கவுன்சிலர்ஸ்.. ஒருத்தர்கூட வரலயாமே.. காஞ்சிபுரம் மேயர் கிரேட் எஸ்கேப்.. திமுக வைத்த ட்விஸ்டு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால், தீர்மானம் வெற்றிபெறவில்லை என்று கூறி இன்றைய கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, தமாகா, சுயேச்சை என மொத்தம் 51 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.. இதில், திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியின் குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.
திமுக கவுன்சிலர்: ஆனால், மகாலட்சுமிக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகள் குவிந்தன.. சக கவுன்சிலர்களே போர்கொடியையும் தூக்கினார்கள்.. மற்ற கவுன்சிலர்கள் அல்லாமல் திமுக கவுன்சிலர்களும், மகாலட்சுமிக்கு எதிராக போர்கொடி தூக்கியதுமே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.

ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்றபோதும், கூட்டத்தில் சலசலப்புகள் நிறைந்தே காணப்பட்டன.. இதனால், திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அத்துடன், திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அமைச்சர் கே.என.நேரு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது... ஆனாலும் இவைகளில் எதிலுமே சுமூக முடிவும் எட்டப்படவில்லை..
எதிர்க்கட்சிகள்: மாறாக, எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து, திமுக கவுன்சிலர்களும், மேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.. இந்த அளவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், மாநகராட்சி விவகாரங்களில் மேயர் கணவர் யுவராஜின் தலையீடு அதிகமாக இருக்கிறதாம்.
எனவேதான், நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இன்றைய தினம் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் அறிவித்திருந்தார்.
உறுதிப்பாடு: இதனிடையே திமுக திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் திமுக க. கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.. ஆனாலும், கவுன்சிலர்கள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்..
இன்று திங்கட்கிழமை, திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது.. திமுக மேயருக்கு எதிரான நிலையில், 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேரும், காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலாவுக்கு கிளம்பி சென்றுள்ளனர்..
பதவி நீக்கம்: திமுக மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் மேயருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும்..
இப்படிப்பட்ட சூழலில், 2 தரப்பிலுமே கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றுள்ளதால், இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாத கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? மேயர் பதவி தப்புமா? என்றெல்லாம் சந்தேகமும் பரபரப்பும் எழுந்தது.
ஆனால், எதிர்பார்த்தபடியே, இன்று காலை 11.30 மணி ஆகியும் கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் யாருமே வரவில்லை.. இதனால், வராததால் மேயர் மகலாட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறவில்லை என அறிவித்துவிட்டு ஆணையர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, திமுக தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்களை அழைத்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட உறுப்பினர்களும் ஏன் பங்கேற்கவில்லை என்பது தெரியவில்லையாம்.












Click it and Unblock the Notifications