ஏன்யா! இந்த பாட்டிய பார்த்தா வருமான வரி கட்டற மாதிரியா இருக்கு.. விஏஓவை வெளுத்த திமுக எம்எல்ஏ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மூதாட்டி ஒருவருக்கு ரூ 1000 உரிமைத் தொகை தர மறுத்ததாக விஏஓ குறித்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடம் புகார் அளித்ததை அடுத்து "இந்த பாட்டியை பார்த்தால் வருமான வரி கட்டுற மாதிரியா இருக்கு" என கேள்வி எழுப்பி கடுமையாக கண்டித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ரூ 1000 உதவித் தொகை கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு இந்த திட்டத்தை 2 ஆண்டுகளாக தொடங்காமலேயே இருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்ய சில காரணிகள் வரையறுக்கப்பட்டது. அதன்படி சொந்த வீடு வைத்திருக்கக் கூடாது, ஆண்டுக்கு 3500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது, அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது, வீட்டில் அரசு வேலை செய்யும் நபர்களும் இருக்கக் கூடாது. கார், பைக் வைத்திருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டையுடன் ரூ 1000 உரிமைத் தொகை கடந்த 2 மாதங்களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து கிடைக்காத நபர்களுக்கு விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்துடன் குறும்தகவல் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் காஞ்சிபுரத்திற்கு திமுக எம்எல்ஏ எழிலரசன் சென்றிருந்தார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து கொண்டு எங்களுக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றனர்.
அதற்கு எழிலரசன் "இதுவரை 1 கோடி பேருக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. எல்லாருக்கும் எப்படி போடுவது, ஒருத்தர் 10 ஆண்டுகளுக்கு முன்பு 15 லட்சம் போடுவேன் என்றாரே போட்டுவிட்டாரா, யாராவது கேள்வி கேட்டீர்களா? ஒவ்வொரு வீட்டிற்கு அல்ல, ஒவ்வொரு ஆளுக்கு கொடுக்கிறேன் என்றாரே, என்னாச்சு? என்றார். அதற்கு அந்த பெண்கள், மோடியை வரசொல்லுங்க, அவரிடம் கேட்கிறோம். இப்போது நீங்கள்தானே வந்திருக்கீங்க, அதனால் உங்களிடம் கேட்கிறோம் என்றார்கள்.

அப்போது ஒரு மூதாட்டி, தம்பி எனக்கு வருமானமே இல்லை, நான் வருமான வரி கட்டறதால என் விண்ணப்பத்த நிராகரிச்சதா தகவல் வந்தது என்றார். உடனே அங்கிருந்த விஏஓவை பார்த்து எழிலரசன் " ஏன்யா இந்த பாட்டியை பார்த்தால் உனக்கு வருமான வரி கட்டுவது போல் தெரியுதா? நீங்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் பதில் சொல்லணுமா?
அரசு அலுவலர்கள் மாத சம்பளம் வாங்கினால் போதுமா, மக்கள் நலனில் அக்கறை வேண்டாமா? அரசு அலுவலர்கள் செய்யும் தவறால் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் பொதுமக்களிடம் பதில் கூறும் நிலையை ஏற்படுத்துவதா, நீங்கள் சம்பாதித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்துவிடுவீர்கள், நாங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும் பணத்தை வாங்கி நீங்கள் போட்டுக் கொள்வீர்களா? உங்களை சஸ்பெண்ட் செய்தால் என்ன என கேட்டார். மேலும் மகளிர் உரிமைத் தொகை கேட்டவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய எழிலரசன் அங்கிருந்து கிளம்பிய போது பெண்கள் கைதட்டி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications