இலக்கியாவுக்கு சீமந்தம்.. கண் கலங்க வைத்த ஆண் காவலர்கள்.. செங்கல்பட்டில் ஒரு நெகிழ்ச்சி விழா
Recommended Video
செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் நிலையத்தில் பெண் காவலராக உள்ள இலக்கியாவுக்கு காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சக காவலர்கள் தலைமையில் சீமந்த விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி அடுத்த கொண்டியாம் பூண்டி கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயியின் மகள் இலக்கியா. செங்கல்பட்டில் பெண் காவலராக உள்ளார். இவரது கணவர் இராசு. அதே பகுதியில் தனியார் அரிசி ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக சீமந்தம் நடத்த முடியாத நிலை இலக்கியா குடும்பத்திற்கு ஏற்பட்டது. இதுகுறித்து சக பெண் காவலர்கள் மூலம் காவல் ஆய்வாளர் இளங்கோவனுக்கு தெரிய வந்தது.

ஆளுக்கொரு செலவு
உடனடியாக இலக்கியாவுக்கு சீமந்தம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அனைவரும் ஆலோசித்து ஆளுக்கொரு செலவை ஏற்றுக் கொண்டனர்.

இலக்கியா
பின்னர் தங்கள் சொந்த செலவில் தனியார் திருமண மண்டபத்தில் இலக்கியாவுக்கு சீமந்தம் செய்தனர். தன் குடும்பத்தை சேர்ந்த சகோதரியை போல எண்ணி ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலக்கியாவை வாழ்த்தினர்.

9 வகை உணவுகள்
9 மாத கர்ப்பிணியான இலக்கியாவின் சீமந்த விழாவில் சீர் வரிசை பொருள்களுடன் 9 வகையான அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. இலக்கியா அகமகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்ததை கண்ணால் காண முடிந்தது.

பாராட்டு
பொதுவாக ஆண் காவல் அதிகாரிகள், காவலர்கள் பெண் காவலர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து இருக்கும் பட்சத்தில் இப்படி சீமந்த நிகழ்ச்சியை நடத்தி சகோதரத்துவத்தை காட்டியதை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications