யமஹா தொழிலாளர் போராட்டம்! வேலை மட்டும் போதுமா? சு.வெங்கடேசன் எம்பி முக்கிய கோரிக்கை
காஞ்சிபுரம்: திருப்பெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் 'யமஹா' தொழிற்சாலையில் நடைபெற்ற போராட்டம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
இது தொடர்பாக வாழ்த்துகளை தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியுள்ள இந்த கருத்து தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீடு சீட் 2169.. ஆனால் நிரப்பப்பட்டது வெறும் 6! மான்சுக் மாண்டவியாவுக்கு சு.வெங்கடேசன் கடிதம்

இந்தியாவும் பொதுத்துறை நிறுவனங்களும்
உலகம் முழுவதும் கடந்த 2009ம் ஆண்டு பெரும் பொருளாதார மந்த நிலை ஒன்று உருவானது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே இதில் சிக்கி திண்டாடிய நிலையில், இந்தியா அதிக பாதிப்பில்லாமல் தப்பித்துக்கொண்டது. அதிலிருந்தே தப்பித்த இந்தியா, தற்போது கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் சிரமத்தை சந்திக்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்களின் வீழ்ச்சிதான் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகின்றன. ஆனால் இவையாவும் சமூக பாதுகாப்பான வேலைகள் கிடையாது. தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு மூலம் சில தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த தொழிற்சாலைகள் ஒப்பந்த முறையிலேயே ஊழியர்களை பணிக்கு எடுத்து வருகின்றன.

போராட்டம்
இந்த ஒப்பந்த முறையை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் 'யமஹா' தொழிற்சாலையில் கடந்த 11ம் தேதி முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். போராட்டத்தின் கோரிக்கையாக தொழிற்சங்கம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தொழிற்சங்கம் உருவாக்கப்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை நிர்வாகத்திடமிருந்து பேசி பெற முடியும் என்றும் தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் தொழிலாளர் தரப்பிலிருந்து அனைத்து கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

போராட்டம் வெற்றி
அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போராட்டம் நடந்த நாள்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யமஹா தொழிலாளர்களின் இந்த போராட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து யமஹா நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கும், சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்திற்கும் எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அந்நிய நேரடி மூலதனம் வேலைவாய்ப்பை தருகிறது. அதேநேரம் கண்ணியமான, சுய மரியாதையுடனான வேலை வாய்ப்பை தரவேண்டும் என சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் தனியார்மயம்
இந்தியாவில் 1991க்கு பிறகு அந்நிய நேரடி முதலீடு முறை அமலானது. இதன் மூலம் அரசு துறைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயம் காலூன்றியது. தற்போது இந்தியா முழுவதும் சுமார் 35 லட்சம் பேர்தான் அரசு ஊழியர்களாக இருக்கின்றனர். இதன் அர்த்தம் என்னவெனில், இவர்களுக்கு மட்டும்தான் அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கும். உலக அளவில் இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதியானவர்கள் 25-35 வயதை கொண்டவர்கள். இவ்வாறு இருக்கும் நிலையில், இவர்களில் வெறும் 35 லட்சம் இளைஞர்களுக்கு மட்டும்தான் அரசின் சலுகைகள் கிடைக்கும். கோடிக்கணக்கான மற்ற இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பான வேலை என்பது எட்டாக்கனி என்றும், அதேபோல போராடிப் பெற்ற இடஒதுக்கீடு தனியார் துறைகளில் அமல்படுத்தப்படுவதில்லை எனவும் தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.