ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்
காஞ்சிபுரம்: ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் செந்தில் (எ) இதயவர்மன் இருவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:
மோடி மற்றும் எடப்பாடி ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்த உங்களுக்கு இந்த வெயில் கொடுமை பெரிது இல்லை.
மோடியிடம் இருந்த இந்த நாட்டை காப்பாற்ற, எடப்பாடியிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வரும் 18ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

நல்ல வாய்ப்பு
நேற்றிலிருந்து பணம் கொடுக்க துவங்கிவிட்டனர். நமது பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். வாங்குவதை அதிகமாக கேட்டு வாங்குங்கள். கொடுப்பதை வாங்கி கொண்டு அவர்கள் முகத்தில் கரியை பூசுங்கள். அதற்கு நல்ல வாய்ப்புதான் இந்த தேர்தல்.

பழமொழி
மோடி இந்திய பிரதமர் இல்லை. வெளிவாழ் பிரதமர். அவர் வெளிநாடுகளில் தான் இருப்பார். அவருக்கு அடிமையாக கூஜா தூக்குகிற எடப்பாடி. ஒரு பழமொழி சொல்வார்கள் ஜாடிக்கேத்த மூடி - மூடிக்கேத்த ஜாடி.

இரு மாங்காய்
கொள்ளையடிப்பதற்கும், லஞ்சம் வாங்குவதற்கும், ஊழல் செய்வதற்கும் நாட்டை குட்டிச்சுவராக மாற்றுவதற்கும் மோடியும், எடப்பாடியும் சேர்ந்துள்ளனர். திருப்போரூர் தொகுதி மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு.

வாக்குச் சாவடி
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தால் டெல்லியில் இருக்ககூடிய மோடி, இங்கு இருக்ககூடிய எடப்பாடி ஆகியோர் வீட்டுக்கு செல்வர். கருணாநிதி உடல் அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுத்த இவர்களுக்கு ஓட்டு போடலாமா ? அவர்களுக்கு தமிழகத்தில் மீன்டும் இடம் கொடுக்கலாமா ? ஆக அந்த முடிவோடு வாக்குச்சாவடி வாருங்கள் என ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications