Vijay Parandur Rahul: யார்ரா அந்த பையன்..நான்தான் அந்த பையன்!பரந்தூரில் விஜய் குறிப்பிட்ட ராகுல் யார்?
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், காஞ்சிபுரம் மாவட்ட பரந்தூரில் புதிதாக அமையவுள்ள விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்துள்ளார். தனது பேச்சின் தொடக்கத்தில் ராகுல் என்ற சிறுவனின் பேச்சைக் கேட்டு தான் களத்திற்கு வர முடிவு செய்ததாக விஜய் பேசிய நிலையில், அந்த சிறுவன் யார் என தேட தொடங்கியுள்ளனர் விஜய் கட்சியினர். இந்நிலையில் விஜய் குறிப்பிட்ட 'ராகுல்’ இவர் தான் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பரந்துர், தண்டலம், மகாதேவி, நெல்வாய், நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த சுமார் 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்படுவதாக கூறி அந்த மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பகுதி மக்கள். அவர்கள் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், மே 17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அந்த பகுதி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்தார். பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக பிரச்சார வாகனத்தில் வருகை தந்த விஜய் அங்கிருந்த ஊர் மக்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசினார்.
அப்போது பேசிய அவர்,” கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற ஒரு சிறுவன் பேசியது எனது மனதை ஏதோ பண்ணியது.. உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு.. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு.. உங்க எல்லார் கூடயும் நிற்பேன்.. தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் குறிப்பிட்ட ராகுல் யார் என நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் குறிப்பிட்ட ராகுல் இவர்தான் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அந்த சிறுவன் தான் ராகுல் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் சிறுவன்,” பரந்தூர், ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் கொண்டு வர வேண்டாம். ஏரியை மூடிவிட்டு விமான நிலையம் கட்டினால் நாங்கள் என்ன விமானத்திலா பறக்க போகிறோம்?. விமான நிலையம் கட்டினால் எங்கள் பள்ளிக்கூடம் போய்விடும். நாங்கள் படிக்க வேண்டாமா? விமான நிலையம் கட்டுபவர்களின் மகன்கள் பெரிய பெரிய பள்ளிகளில் படிக்கும் போது நாங்கள் படிக்க வேண்டாமா? இந்த ஏரியில் தான் நாங்கள் குளித்து விளையாடுகிறோம். இந்த ஏரி எங்களுக்கு வேண்டும். எங்கள் பள்ளி எங்களுக்கு வேண்டும் விமான நிலையம் இங்கே கட்டக் கூடாது” என பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications