கன்னியாகுமரியில் நண்பர்களுடன் ஜாலி மது விருந்து.. புதுமாப்பிள்ளைக்கு கனவிலும் நம்ப முடியாத சம்பவம்
கன்னியாகுமரி: நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்லும் போது, மது அருந்தும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மது அருந்துவிட்டு ஜாலியாக நண்பர்களுடன் சுற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் இவாஞ்ஜெரி மது விருந்து கொண்டாட்டத்தின் போது கனவிலும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்த 28 வயதாகும் இவாஞ்ஜெரி என்பவர் வக்கீல் ஆவார். இவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு 25 வயதாகும் சாகினியா என்ற வக்கீலை காதலித்து கல்யாணம் செய்தார். புதுமண தம்பதியின் வாழ்க்கை கடந்த ஒன்றரை மாதமாக இனிமையாக சென்றுள்ளது.

புதுமாப்பிள்ளையான இவாஞ்ஜெரி, இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக டிசம்பர் 24-ந்தேதி நண்பர்களுடன் குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு சென்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அங்கு இவாஞ்ஜெரி உள்பட அனைவரும் மதுபான பாரில் உற்சாகமாக மது குடித்துள்ளார்களாம்.
இதில் போதை தலைக்கேறிய புதுமாப்பிள்ளை இவாஞ்ஜெரி, மதுபாருக்கு பின்புறம் சென்றுவிட்டாராம்,. மதுபோதையில் இருந்த அவர் திடீரென தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து குளிக்க முயன்றாராம். ஆனால் அதிக போதை காரணமாக நீரில் மூழ்கிய அவரை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆடிப்போன நண்பர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை சென்னி தோட்டத்தை அடுத்த கமுகனூர் என்னும் இடத்தில் ஒருவரின் உடல் ஆற்றில் மிதந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் அந்த உடலை மீட்டனர்.
பிணமாக மீட்கப்பட்டவர், புதுமாப்பிள்ளையான இவாஞ்ஜெரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என நண்பர்களிடமும், பாரில் பணிபுரிந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பு: மது அருந்திவிட்டு ஆற்றில் தயவு செய்து குளிக்க வேண்டாம்.. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தண்ணீர் அதிகமாக வருகிறது. மது அருந்துவிட்டு குளிக்கும் போது, தவறாக முடிந்துவிட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications