சென்னைக்கு போன மனைவி.. நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது விருந்து வைத்த கணவன்.. அடுத்து நடந்த கொடூரம்
குமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே வீட்டில் ரத்த காயங்களுடன் எலக்ட்ரீசியன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மனைவி சென்னைக்கு சென்ற நிலையில் கணவர் நண்பர்களை அழைத்து அவர்களுக்கு மது விருந்து அளித்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் அடித்து கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே அமராவதி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). மகேஷ் வெளிநாட்டில் எலக்ட்ரீசனாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த ஷோபி (38) என்ற பெண்ணை மகேஷ் 2வதாக திருமணம் செய்தார். பின்னர் இவர் மனைவி ஷோபியோடு குமரி தக்கலைக்கு வந்தார். இருவரும் அங்குள்ள வீட்டில் மாடியில் வசித்து வந்தனர். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஷோபி மட்டும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவதற்காக சென்னை சென்றார். இந்த நிலையில் நேற்று ரத்த காயங்களுடன் மகேஷ் வீட்டில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகேஷ் உயிரிழந்தது எப்படி என்று விசாரணையை தொடங்கினர்.
இதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதாவது, மகேஷுக்கு அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படித்தான் மனைவி சென்னைக்கு சென்றதும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து குடித்துள்ளார். நண்பர்களுடன் ஒன்றாக குடித்துக்கொண்டிருந்த போது, திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த தகராறின் போது மகேஷை அவரது நண்பர்கள் குத்தி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மது விருந்தில் பங்கேற்ற நண்பர்கள் யார் யார் என்றும், அவர்களை பிடிக்கவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் கணவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
