கன்னியாகுமரி மீனாவால் 3 லட்சம் போச்சு.. நாகர்கோவில் வியாபாரிக்கு நடந்த நம்பிக்கை துரோகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த வினுகுமார் என்பவர் கேரள மாநிலத்தில் இருந்து ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமணப்பொருளை விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்.. இவர் மீனா என்ற பெண்ணுக்கு ஜிஎஸ்டி எண்ணை தந்துள்ளார். அப்போது நூதன முறையில் 3 லட்சம் ரூபாய் அவர் இழப்பு ஏற்படுத்தினாராம். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இன்றைய சூழலில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தகவல்களை யாருக்கும் அவ்வளவு எளிதாக பகிரக்கூடாது. அவர்களின் இந்த இரு ஆவணங்களை வைத்து ஜிஎஸ்டி எண்ணை உருவாக்கி மோசடி செய்துவிட முடியும். அப்படி மோசடி செய்தவர்களால் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் பலர் ஜிஎஸ்டி அலுவலகங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஜிஎஸ்டி எண் வைத்துள்ள வணிகர்களிடம் வணிகம் செய்வதாக நம்ப வைத்து அவர்களின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி வணிகம் செய்து பணம் சம்பாதித்து விட்டு கடைசியில் ஏமாற்றுவதும் நடக்கிறது.. அப்படிப்பட்ட மோசடி தான் நாகர்கோவிலில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் ரோடு பகுதியில் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமணப் பொருள் ஏஜென்சி கடை ஒன்றை 57 வயதாகும் வினுகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் இருந்து கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாங்கி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அந்த எஸ்டேட் ஏஜென்சிதாரர்களிடம் இருந்து நல்லமிளகு, கிராம்பு, ஏலக்காய் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பண பரிமாற்றத்துக்காக வினுகுமார் தனது ஜி.எஸ்.டி. எண்ணை அந்த எஸ்டேட் ஏஜென்சியின் இயக்குனர் மீனா (59), மேலாளர் சிவராமகிருஷ்ணன் (57) ஆகிய இருவரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிறகு விலை கட்டுப்படியாகாததால் அவர்களிடமிருந்து பொருட்கள் வாங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் 4-ந் தேதிக்குள் ரூ.29 லட்சத்து 9 ஆயிரத்து 704 ரூபாய் அளவுக்கு நறுமணப் பொருட்களை எஸ்டேட் ஏஜென்சியின் இயக்குனர் மீனா (59), மேலாளர் சிவராமகிருஷ்ணன் (57) ஆகியோர் விற்பனை செய்துள்ளனராம். அதற்கு வினுகுமாரின் ஜி.எஸ்.டி. எண்ணை பயன்படுத்தி ரூ.3 லட்சம் இழப்பீட்டை ஏற்படுத்தி விட்டார்களாம்.
இதனை ஒரு கட்டத்தில் அறிந்த வினுகுமார் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீனா மற்றும் சிவராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனு கொடுத்தார். அதன்பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மீனா, சிவராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications