அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட காயத்ரி ரகுராமுக்கு தாமரை தந்த ஆட்டோ டிரைவர்.. கன்னியாகுமரியில் சுவாரஸ்யம்
கன்னியாகுமரி: அதிமுகவுக்கு ஓட்டு கேட்க சென்ற காயத்ரி ரகுராமிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தாமரை கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவர் அப்போது பாஜகவில் இணைந்த விஜயதாரணியையும் பாஜக கூட்டணிக்கு சென்ற ஓபிஎஸ்ஸையும் விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கன்னியாகுமரியில் உள்ள கடை வீதிகள், பஜார் சாலைகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு ஆட்டோவிடம் சென்றார். அங்கிருந்த டிரைவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு நோட்டீஸை அளித்தார். அப்போது அந்த நபர் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என தாமரைப் பூவை நீட்டினார். அப்போது காயத்ரி, நான் பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
தற்போது அதிமுகவில் இருக்கிறேன். அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். மீண்டும் அந்த நபர் தாமரையை கொடுத்தார். இதனால் அவர் வாங்கிக் கொண்டார். பிறகு நோட்டீஸை, காயத்ரி நீட்டியபோது அவர் வாங்கிக் கொள்ளவில்லை. உடனே காயத்ரி, "நீங்கள் கொடுத்த போது நான் வாங்கிக் கொண்டேனே, நீங்களும் வாங்கிக்கணும்" என்றார். உடனே அந்த நபர் வாங்கிக் கொண்டார்.
இதையடுத்து கடை கடையாக சென்ற காயத்ரி, "எடப்பாடி ஐயா , எல்லாருக்கும் நல்லது செய்வார், அவருக்கே ஓட்டு போடுங்கள், பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆண்டும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை, எடப்பாடிக்கு விவசாயம் தெரியும், அவர்களுடைய கஷ்டங்கள் தெரியும். எனவே இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்" என காயத்ரி கேட்டுக் கொண்டார்.
பாஜகவில் தீயாய் பணி செய்து வந்த காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைமையுடன் ஏற்பட்ட மோதல் போக்காலும், பெண்களுக்கு குரல் கொடுத்த போது அவருடைய குரல் ஒடுக்கப்பட்டதாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி வெளியே வந்தார். பின்னர் எந்த கட்சியிலும் இணையத் தயார் என்றார்.
எப்போதும் காயத்ரி, விசிக தலைவர் திருமாவளவனை தாக்கியே பேசி வந்ததால் அவருக்கும் விசிகவினருக்கும் சமூகவலைதளங்களில் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அதையெல்லாம் மறந்துவிட்டு திருமாவளவனை ஒரு நாள் திடீரென சந்தித்தார். இதனால் அவர் விசிகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications