நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும்.. காங்கிரஸ் நிர்வாகி வேலுசாமி சொன்னதும் ஆதவ் அர்ஜுனா கொடுத்த ரியாக்ஷன்
குமரி: சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க கூடும் என்ற பேச்சு அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்து பரபரப்பை கிளப்பி வரும் சூழலில், குமரி அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி வேலுச்சாமி, நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும் என்றார். தவெக சர்பாக ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வேலுச்சாமியின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது 4 முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக பாஜக தங்கள் கூட்டணியை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவும் தங்களுடன் உள்ள கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்து இருக்கிறது.

அருமனை கிறிஸ்துமஸ் விழா
எனினும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவை தன் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்காமல் போனது தொடர்ந்து காங்கிரசை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் திமுகவுடன் தான் கூட்டணி என்று உறுதியாக சொல்லிவிட்டது.
எனினும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் திரை மறைவில் பேசப்பட்டு வருகிறது. அவ்வப்போது இது தொடர்பான யூகங்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பரவி வரும் சூழலில் தான் நேற்று முன் தினம் குமரி அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவும் தவெக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
நல்லவர்கள் இணைப்பு விரைவில்
அதுமட்டும் இன்றி விழாவில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி வேலுசாமி நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும் என்று பேசினார். அப்போது மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா அவரை பார்த்து ஆம் என்று சொல்லும் வகையில் சைகை காண்பித்தார்.
குமரி மாவட்டம் அருமனையில் நேற்று முன் தினம் 28-வது கிறிஸ்துமஸ் விழா, மத நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவெக, காங்கிரஸ், விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். காங்கிரஸ் நிர்வாகி வேலுசாமி கூறியதாவது:-
எதற்காக அவதரித்தார்?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், அருமை இளவல் விஜய்யின் வாழ்த்துக்களை சுமந்து வந்திருக்கிற அருமை தம்பிகள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் அவர்களை வரவேற்கின்றேன். இயேசுபிரான் என்று பேசும் போது, அவர் எதற்காக அவதரித்தார்? அவதரித்தார் என்ற சொல்லை நான் சரியாக பயன்படுத்துகிறேன். பிறந்தார் என்று சொல்ல மாட்டேன். அவதரித்தார்.
பாவப்பட்டவர்களை, பாவிகளை இரட்சிக்கவும், ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் தான் அவர் அவதரித்தார். இன்றைக்கு அதே போல பாவிகளை இரட்ச்சிக்கவும், ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் நாம் எல்லாரும், அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் எல்லாரும் தான் இங்கே கூடி இருக்கிறோம்.
நல்லது நடக்கும்
அதற்கான பின்னணியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இது புரிந்து இருந்தால் பெரிய கை தட்டல் வந்துருக்கும். உங்களுக்கு புரியல.. நாம் இணைந்திருக்கிறோம் என்று சொன்னேனா.. இணைப்பு பலப்படும். அந்த இணைகின்றவர்கள் நல்லவர்கள் என்றால் நல்லது நடக்கும். அந்த நல்லது விரைவில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்திற்கு பிற்கு வந்த முதல் செல்போன் அழைப்பு ராகுல் காந்தியிடம் இருந்துதான் என்றும் இதைப்பார்த்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார் எனவும் ஆவேசமாக பேசினார். சட்டமன்ற தேர்தலில் தவெக வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறது.
தற்போது வரை அந்தக் கட்சியிடம் சொல்லிக்கொள்ளும்படி யாரும் கூட்டணி வைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பும் நிலையில், காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications