ஏடிஎம்க்கு போனவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்.. என்ன மனுசன் சார் அவரு.. கன்னியாகுமரியே நெகிழ்ந்துடுச்சு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குள்ளச்சலில் உள்ள வங்கி ஏடிஎம் இல் கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரம் வந்துள்ளது. அதனை அந்த ஆட்டோ டிரைவர் நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்தார். அவரை வங்கி அதிகாரிகள் பாராட்டினார்கள்.
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க முயற்சித்த போது சில நேரங்களில் பணம் இல்லை என்று பதில் வரும். அப்படியே வந்தாலும் 500 ரூபாய் தான் பல நேரங்களில் வரும் . அபூர்வமாக ஏடிஎம்களில் 100 ரூபாய் கூட வரும்..

ஆனால் ஏடிஎம்களில் நாம் கேட்கும் பணத்தை விட அதிகமாக கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படியான சம்பவங்கள் எப்போதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடக்கும். அண்மையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஏடிஎம்களில் பணம் எடுக்க போனவர்களுக்கு அதிக பணம் கிடைத்தது. அதை பற்றி கேள்விப்பட்டு ஊரே திரண்டு வந்தது. ஆனால் வங்கி அதிகாரிகள் விஷயத்தை அறிந்து பதறியடித்து ஓடிவந்து அந்த ஏடிஎம்மை மூடியது தனிகதை.
ஆனால் இங்கு வங்கி ஏடிஎம் இல் கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரம் வந்துள்ளது. அதனை ஆட்டோ டிரைவர் நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 54 வயதாகும் ஜெயச்சந்திரன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் புதன்கிழமை காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க போய் இருக்கிறார்.
அங்கு ஜெயச்சந்திரன் ஏ.டி.எம். கார்டை செருக முயன்றபோது எந்திரத்தில் இருந்து தானாக பணம் வந்து கொட்டி இருக்கிறது. கார்டையே செருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என ஆச்சர்யத்துடன் அவர் அந்த பணத்தை எடுத்து எண்ணி இருக்கிறார்.
அதில் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இது அனைத்தும் ரூ.500 நோட்டுகளாக இருந்தது. இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் அதனை நேர்மையுடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு போனார். அங்கு பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
என்ன நடந்தது? குளச்சலில் உள்ள குறிப்பிட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர் யாரோ பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்துள்ளார்கள். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் வந்துள்ளது.
இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் அங்கிருந்து சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்திருக்கிறது. அதைத்தான் ஜெயசந்திரன் வங்கியில் ஒப்படைத்துள்ளார். பணத்தை தவறவிட்ட சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து பணத்தை தர வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications