ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்! கன்னியாகுமரியில் களமிறங்கிய கனிமொழி! உட்கட்சி சண்டைக்கு சமரச படலம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமாரி மாவட்ட திமுக அலுவலகத்துக்கு விசிட் அடித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் குமரி மாவட்டத்தில் ஓங்கி வரும் கோஷ்டிப் பூசல்களுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனையையும், சமரச பேச்சுவார்த்தையையும் நடத்தியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்ட திமுகவை பொறுத்தவரை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் என மூன்று டீம்கள் தனிதனியாக இயங்கி வருகின்றன. மனோ தங்கராஜூக்கும், சுரேஷ் ராஜனுக்கும் இடையே உள்ள பனிப்போர் என்பது காலம் காலமாக உள்ள ஒன்றாகும்.

நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷுக்கும் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை தான் இப்போது புதிதாக பார்க்கப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுரேஷ்ராஜனை எதிர்த்து அரசியல் செய்து வந்த நிலையில் ''எப்புட்றா'' வைரல் வசனத்தை போல் இப்போது இருவர் மத்தியிலும் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் நடக்கும் கோஷ்டிப்பூசலை ரசிக்கும் பாஜக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குமரி தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றுகிறது. அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கும் வலைவிரிப்பதற்கான பணிகள் நடக்கின்றன.

இதனால் சுதாரித்துக்கொண்ட திமுக தலைமை கன்னியாகுமரிக்கு கனிமொழி எம்.பி.யை நேரில் அனுப்பி, நிர்வாகிகள் இடையே இருக்கும் மனஸ்தாபங்களை சரிசெய்து நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகிய மூவரிடமும் கனிமொழி சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications