குடிபோதையில் சக ஆசிரியரை வெளுத்த வாத்தியார்கள்... போலீசை பார்த்ததும் எஸ்கேப்!
Recommended Video

மருதன்கோடு : கன்னியாகுமரி மாவட்டம் மருதன்கோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் குடிபோதையில் வந்த ஆசிரியர்கள் இருவர் சக ஆசிரியரை வெளுத்தெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் சென்ற ஆசிரியர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதன்கோடு பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் உணவு நேரத்தில் ஆசிரியர் தங்கமணி உணவருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பள்ளியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் ஜாண்லால் ஆகிய இரு ஆசிரியர்களும் பள்ளியின் வெளியே சென்றுவிட்டு தங்கமணி ஆசிரியர் இருந்த அறைக்கு உணவருந்த வந்துள்ளனர்.
சாப்பிட்டு முடித்து தங்கமணி ஆசிரியர் வகுப்பில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க கிளம்பியபோது உணவருந்தி கொண்டிருந்த இரு ஆசிரியர்களும் தங்கமணியை தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர். இதை தட்டிகேட்ட தங்கமணியை இரு ஆசிரியர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தங்கமணி பள்ளியை விட்டு வெளியே சென்று ஊர்மக்களிடம் உதவி கேட்டுள்ளார்.

சிக்கிய ஆசிரியர்கள்
ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து படுகாயமடைந்த தங்கமணியை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே மார்த்தாண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி ஆசிரியரை தாக்கிய ஜெயசீலன் மற்றும் ஜாண்லால் ஆகிய இரு ஆசிரியரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.

நழுவிய போதை ஆசிரியர்கள்
அப்போது இரு ஆசிரியர்களும் காரை எடுத்து வருவதாகக் கூறி காரை எடுத்துக் கொண்டு பள்ளியில் இருந்து தப்பி சென்றனர். தப்பி சென்ற இரு ஆசிரியர்களையும் மார்த்தாண்டம் காவல்துறையினர் பின்தொடர்ந்து சொகுசு காரை நிறுத்த முயன்றபோதும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளனர். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து கூறிய அந்தப் பகுதிமக்கள், இந்த பள்ளியில் தொடர்ந்து இதுபோல் ஆசிரியர்கள் இடையே மோதல் ஏற்படுவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட இரு ஆசிரியர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான சண்டை
தப்பு செய்த ஆசிரியர்கள் போலீசை பார்த்ததும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தப்பித்தது ஏன்? மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளியில் ஆசிரியர்களே இதுபோன்று இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியையும் அந்தப் பகுதி மக்கள் எழுப்பியுள்ளனர். பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களே இப்படியா?
மாணவர்களுக்கு நல்ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் தீய செயல்கள், தவறில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக தப்பிப்பது என தவறான முன்உதாரணமாக மாறியுள்ளனர். ஆசிரியர்களிடையே முன்விரோதம் இருந்தால் அதனை தீர்க்க பள்ளியும் வகுப்பறையும் சரியான இடம் தானா என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும். ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறையின் நடவடிக்கை உடனடியாக வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications