கன்னியாகுமரியில் அரசு ஊழியர் போல் வந்த இளம் பெண்.. ஒரே நிமிடம் தான்.. ஆடிப்போன லட்சுமி பாட்டி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். கணவர் வெளியில் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை இளம் பெண் ஒருவர் பார்க்க வந்துள்ளார். அவர் மூதாட்டி லட்சுமியை நலவாரியத்தில் சேர்த்து விடுவதாக கூறி நூதன முறையில் தங்க கம்மலை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். சில நிமிடத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள கம்மலை பறிகொடுத்துள்ளார் மூதாட்டி.
சற்று கவனமாக இல்லாவிட்டால், பேச்சுக்கொடுத்தே நகைகளை பறித்து விடுவார்கள். படித்தவர்களிடையே ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மோசடி நடக்கும் நிலையில், படிக்காதவர்கள், வயதானவர்களிடம் நலவாரியம், உதவி தொகை என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியில் 88 வயதாகும் ராமையா வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமிக்கு 75 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கணவர் வெளியே கடைக்கு சென்ற நேரம் லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது ஒரு பெண் வீட்டுக்கு வந்து ஏதோ தெரிந்தவர் போல் மூதாட்டியிடம் பேசி உள்ளார். அந்த பெண் நல வாரியத்தில் சேர்த்து விடுவதாக கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு தாருங்கள் என அரசு ஊழியர் போல கேட்டுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய லட்சுமி அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். பின்னர் போட்டோ எடுக்க வேண்டும் என்றும் அப்போது கம்மல் போட்டிருக்க கூடாது கழற்றி வையுங்கள் என்று அந்த பெண் கூறியிருக்கிறார். உடனே லட்சுமி தனது காதில் கிடந்த ½ பவுன் கம்மலை கழற்றி வைத்துள்ளார். தொடர்ந்து போட்டோ எடுத்த அந்த பெண் லட்சுமியிடம், 'எனக்கு பசிக்கிறது, சாப்பாடு இருந்தால் தாருங்கள்' என கேட்டுள்ளார். உடனே லட்சுமி அவருக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
அந்த பெண் சாப்பிட்ட பின்பு லட்சுமி தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வைக்க சென்றிருக்கிறார். பின்னர் திரும்பி வந்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அத்துடன் லட்சுமி கழற்றி வைத்த ½ பவுன் கம்மல் மாயமாகியிருந்தது. அந்த பெண் கம்மலை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லட்சுமி அந்த பெண்ணை சுற்றுப்பகுதியில் தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி கணவர் வந்ததும் அவரிடம் நடந்ததை கூறினார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூதாட்டியிடம் நூதன முறையில் ½ பவுன் கம்மலை அபேஸ் செய்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். நலவாரியத்தில் சேர்ப்பதாக கூறி மூதாட்டியிடம் ½ பவுன் கம்மலை அபேஸ் செய்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications