நாகர்கோவிலில் பச்சை சுடிதார்.. பின்னாடியே போன சிவப்பு சுடிதார்.. ஓடும் பேருந்தில் ஒரே வெட்கக்கேடு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை, அதில் பயணித்த பயணிகளே சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓடும் பேருந்தில் செயின் பறித்து கையும் களவுமாக சிக்கிய பெண் தப்பி ஓட முயன்ற நிலையில், அவரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுபற்றி பார்ப்போம்.
நமது ஊர்களில் பேருந்துகளில் பயணிப்போர் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ்களில் ஏறி செல்பவர்கள் பணம், நகைவைத்திருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். ஏனெனில் ஜேப்படி திருடர்கள் மற்றும் திருடிகள் சர்வ சாதாரணமாக பொதுமக்கள் போல் அமர்ந்து பணத்தை திருடிக்கொண்டும், நகைகளை பறித்துக் கொண்டும் செல்வார்கள். பெண்களிடம் நகை பறித்து செல்லும் திருடிகள் பேருந்துகளில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். திருடர்கள்.. திருடிகள் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கண் நம் மீதும் , நம் பணம் மற்றும் நகை மீதும் இருக்கும். சரியாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கனநொடியில் திருடிவிட்டு எஸ்கேப் ஆவார்கள்.அவர்கள் திருடுவதில் நன்கு அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மாட்டிக் கொள்வது அபூர்வமாகும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடந்த மாதம் ஒரு பெண் தனது மகளுக்கு திருமணத்திற்கு நகை வாங்க சேர்த்த பணத்தை மொத்தமாக பறிகொடுத்திருக்கிறார். இதேபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் திருடிய பெண் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுனில் ராஜ் என்பவருடைய மனைவி சுபஜா (வயது30). இவர் ஒரு அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் டிசம்பர் 12ம் தேதி காலை 9.15 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை அடுத்த செம்பிலாவிளையில் இருந்து சொந்த ஊரான திக்கணங்கோட்டுக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். திக்கணங்கோடு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் தனது கைப்பையை பார்த்தபோது அது திறந்திருந்திருக்கிறது. பையில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.21 ஆயிரத்தை காணவில்லை.
இதனால் பதறிபோன சுபஜா ஒரு ஆட்டோவை பிடித்து தான் பயணம் செய்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றார். மத்திகோடு அரசு பள்ளி அருகில் வைத்து அந்த பஸ்சை நடுவழியில் தடுத்து நிறுத்தி டிரைவர், கண்டக்டரிடம் தனது பணம் திருட்டு போன விவரத்தை கூறினார். அத்துடன் பயணிகள் அனைவரையும் சோதனை செய்ய பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பெண் இருக்கையில் இருந்து எழுந்து தப்பி செல்ல முயன்றார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். மேலும் அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் திருட்டு போன ரூ.21 ஆயிரம் கிடந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணை பொதுமக்கள் கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை அடுத்த சமீர் வியாஸ் நகரை சேர்ந்த பரமசிவம் என்பவருடைய மனைவி கருப்பாயி (வயது40) என்பதும், அவர் சுபஜாவின் பணத்தை திருடியதும், மாட்டி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டவுடன் பணத்தை இருக்கையின் அடியில் போட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை.. இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் திருடிய பெண் வசமாக சிக்கிக்கொண்டார். நாகர்கோவில் இன்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. அந்த பேருந்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் இளம் பெண் ஒருவரிடம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் நகை பறிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு உஷாரான அந்த இளம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் குறித்து கூறினார்..
அதேநேரம் அந்த பெண் மின்னல் வேகத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விரட்டி பிடித்து அந்த பெண்ணை பேருந்தில் ஏற்றினார்கள். தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போதுஅந்த பெண், தப்பி எல்லாம் ஓடமாட்டேன் என்று கூறி அங்கேயே கம்பியை பிடித்தபடி நின்றார். அவரை சுற்றியிருந்த பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் ஜீப்பையும் , பெண் போலீசாரையும் வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications