ரூ.15 லட்சம் கடன் தரும் தமிழக அரசு.. ரூ.3,75,000 கட்ட தேவையில்லை.. இளைஞர்கள் விண்ணப்பிப்பது எப்படி?
கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுவது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கி உள்ளார்கள். இதன்படி திட்டத்தில் இணைந்தால், 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும்.
நமது ஊரில் படித்து முடித்து வேலை தேடும் பலருக்கு, அரசின் பல்வேறு வாய்ப்புகள் பற்றி தெரிவது இல்லை. வேலை எதுவும் தெரியாவிட்டாலும், வேலைக்கான பயிற்சி அளித்து, கடன் உதவி தந்து முன்னேற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தொழில்களை தொடங்கி முன்னேற விரும்புவோருக்கு அரசு பல்வேறு மானியங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகமானால் மட்டுமே நாட்டில் வேலைவாய்ப்பும், தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பதால், அரசு இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டுகிறது.

இதற்காக தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தியும் வருகிறது. இந்த திட்டத்தில் இளைஞர்கள் பயன்பெறுவது எப்படி? என்பது குறித்து குமரி மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதன்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் சேர கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி தான் (மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து). பொதுப்பிரிவினர் 18 முதல் 45 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர் 18 முதல் 55 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் (அந்தந்த மாவட்டங்களில்) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்ததிட்டப்படி கடன் வழங்கப்படும். வியாபாரம் செய்ய அரசு கடன் தருகிறது. கடன் தொடர்பான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக அரசு வழங்கும். அதாவது 15 லட்சம் என்றால் ரூ.3,75,000 வரை மானியம் கிடைக்கும். தொழில் முனைவோரின் பங்குத் தொகை பொதுப்பிரிவினருக்கு திட்ட முதலீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு மொத்த திட்ட முதலீட்டில் 5 சதவீதமும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பெண்கள், பழங்குடியினர், பட்டியலின பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறன் படைத்தோர் மற்றும் திருநங்கையினர் ஆகியோர் சிறப்பு பிரிவினர் ஆவார். அனைவரும் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பம் பதிவு செய்தபிறகு தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பின்னர் இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவண நகல்களை 2 பிரதிகளில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களின் விவரம் :- பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு), ஆதார் அட்டை, பள்ளி- கல்லூரி இறுதி மாற்றுச்சான்றிதழ், கல்வித்தகுதி குறித்த மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் (தேவைப்படின்), தேவையான மூலப்பொருட்களின் உத்தேச விலைப்பட்டியல் (ஜி.எஸ்.டி. எண்ணுடன்), தொழில் திட்ட அறிக்கை, உறுதிமொழிப் பத்திரம் ரூ.20 முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறன் படைத்தோருக்கான சான்றிதழ் (தேவைப்படின்), முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றிதழ் (தேவைப்படின்) ஆகியவை இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, ராஜாக்கமங்கலம் பிரதானசாலை, கோணம் அஞ்சல், நாகர்கோவில்-4, குமரி மாவட்டம்- 629004. தொலைபேசி எண் 04652- 260008, மின்னஞ்சல் முகவரி: [email protected] தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications